மண் கடத்தலை கண்டுகொள்வதில்லை: வருவாய்த்துறை மீது புகார்
மண் கடத்தலை கண்டுகொள்வதில்லை: வருவாய்த்துறை மீது புகார்சங்ககிரி:சங்ககிரி, இடைப்பாடி தாலுகாக்கள் உள்ள, சங்ககிரி கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் சங்ககிரியில் நேற்று முதல்முறையாக நடந்தது. ஆர்.டி.ஓ., லோகநாயகி தலைமை வகித்தார்.அதில் விவசாயி மணி கொடுத்த மனுவில், 'தேவண்ணக்கவுண்டனுார், கிடையூர் செம்பாங்காட்டில் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதிக்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரமித்துள்ளதால், விவசாய பொருட்களை கொண்டு வரமுடியவில்லை' என கூறியிருந்தார்.அதற்கு ஆர்.டி.ஓ., லோகநாயகி, 'நிலத்தை அளவீடு செய்து பாதை அமைத்து தர தாசில்தார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.தொடர்ந்து தேவண்ணக்கவுண்டனுார் விவசாயி சத்யராஜ் பேசுகையில், 'மரவள்ளிக்கிழங்கு விலையை ஏற்றி தர வேண்டும். தேவண்ணக்கவுண்டனுார் கூட்டுறவு சங்கத்தில் விவசாய கடன் வழங்கப்படவில்லை. கிடையூரில் பல மாதங்களாக ஏராளமான டிப்பர் லாரிகளில் அதிக அளவில் மண் கடத்தப்படுகிறது. ஆனால் வருவாய்த்துறையினர் கண்டுகொள்ளவில்லை' என்றார்.லோகநாயகி, 'அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.மற்ற விவசாயிகள் பேசாததால், 25 நிமிடத்தில் கூட்டம் முடிந்தது. தாசில்தார் வாசுகி, ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் செல்வகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். முதல்முறை கூட்டம் நடந்த நிலையில், 11 விவசாயிகள் மட்டும் பங்கேற்றனர்.