பலத்த காற்றுடன் கனமழையால் மின்மாற்றி, மரங்கள் சாய்ந்தன
பலத்த காற்றுடன் கனமழையால் மின்மாற்றி, மரங்கள் சாய்ந்தனசேலம்:சேலத்தில் சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்து வந்தது. நேற்று மாலை, சேலம் மாநகரில் கருமேகம் சூழ்ந்து பலத்த காற்றுடன் கன மழை கொட்டியது. அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்று வீசியதால், அழகாபுரத்தில் இரு மின் கம்பங்கள், ஒரு மின்மாற்றி, இரு மரங்கள் சாய்ந்தன.சாரதா கல்லுாரி சாலையில், சாரதா மேல்நிலைப்பள்ளியில் இருந்த மரம், சாலையில் சாய்ந்தது. வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மழைநீருடன் கழிவு நீரும் கலந்து, சாலையில் ஓடியதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.மரம் சாய்ந்ததில், 3 கார்கள், ஒரு பைக் சேதமாகின. தீயணைப்பு மற்றும் மின் துறையினர், விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை சரி செய்தனர். பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர்.பக்தர்கள் ஓட்டம்ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை, சூறாவளி காற்று வீசியது. மஞ்சினி சாலையில் புளிய மரக்கிளை முறிந்து, அந்த வழியே வந்த சுற்றுலா வேன் மீது விழுந்தது. வேனில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். வேனின் முன் பகுதி சேதமானது. ஆத்துார் - பெரம்பலுார் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், மக்களுக்காக போடப்பட்ட தகர சீட் பெயர்ந்து விழுந்தது. பக்தர்கள் அலறியடித்து ஓடினர். கோவில் வழிப்பாதை, அம்மம்பாளையம், துலுக்கனுார், ஆத்துார் பகுதியில் வைத்திருந்த பேனர்களும் காற்றில் விழுந்தன. இவற்றை, ஆத்துார் ஊரக போலீசார் அப்புறப்படுத்தினர்.6 மணி நேரம் மின்தடைவாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை பெய்த மழையால், அதிகாலை, 5:00 முதல், 7:00 மணி வரை மின்தடை ஏற்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சூறைக்காற்று வீசியது. இதனால், 6:00 முதல் இரவு, 10:00 மணி வரை தொடர்ந்து மின்தடை ஏற்பட்டதால், வாழப்பாடி மக்கள் அவதிக்கு ஆளாகினனர். இதுகுறித்து வாழப்பாடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பெரியசாமி கூறுகையில், ''அதிகாலை தொழில்நுட்ப கோளாறால் மின்தடை ஏற்பட்டது. இரவு சூறைக்காற்றால், பனை, தென்னை மட்டைகள் மின் கம்பியில் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. பணியாளர்களுடன் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.வாகன ஓட்டிகள் அவதிஏற்காட்டில் நேற்று மாலை, 4:20 மணிக்கு கருமேகம் சூழ்ந்து பலத்த காற்று, இடியுடன் கனமழை பெய்ய தொடங்கி, 4:45 மணி வரை கொட்டியது. இதனால், ஒண்டிக்கடை சந்தைப்பேட்டை வணிக வளாகம் எதிரே உள்ள முக்கிய சாலையில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது. வாகன ஓட்டிகள் சிரமத்தக்கு ஆளாகினர். அரை மணி நேரத்துக்கு பின் மழைநீர் வடிந்தது. மழை இடையே, சிறிது நேரம் ஆலங்கட்டி மழையாகவும் பெய்தது.மேலும் ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே சில இடங்களில் சாலை குறுக்கே சிறு மரங்கள், மரக்கிளைகள் விழுந்து சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 8வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலை குறுக்கே விழுந்த மரத்தை, பஸ் பயணியர், வாகன ஓட்டிகள் இணைந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.தடுப்பு அவசியம்தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் கைலாசநாதர் கோவிலுக்குட்பட்ட தெப்பக்குளம் சுற்றுசுவர் உயரம் குறைவாக இருந்தது. இதனால் பக்தர்கள் கோவிலை சுற்றி வரும்போது அசம்பாவிதத்தை தவிர்க்க, தகடுகளால் தடுப்பு அமைத்திருந்தனர்.அந்த தடுப்பு கடந்த, 6ல் வீசிய காற்றில் பறந்து குளத்தில் விழுந்தது. தற்போது தடுப்பு இல்லாததால், குளத்தில் குழந்தைகள் தவறி விழும் நிலை உள்ளது. அதனால் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.