குபேர மூலையில் அமைக்கப்படும் மேயர் அறைரூ.50 லட்சத்தில் இடமாற்றும் பணியால் சர்ச்சை
குபேர மூலையில் அமைக்கப்படும் மேயர் அறைரூ.50 லட்சத்தில் இடமாற்றும் பணியால் சர்ச்சைசேலம்:சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில் வாஸ்துபடி குபேர மூலைக்கு மேயர் அறையை இடமாற்றும் பணி நடந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாநகராட்சி மைய அலுவலக கட்டடம், 25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, 2019ல் திறக்கப்பட்டது. அப்போதே மேயர், கமிஷனர், கூட்ட அரங்குகள் உள்ளிட்டவை திட்டமிடப்பட்டு, அதற்கேற்ப உள் அலங்காரம் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தப்படாமல் கமிஷனர் தனி அலுவலராக இருந்ததால் மேயர் அறை பூட்டி இருந்தது. கடந்த, 2022ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, மேயராக, தி.மு.க.,வை சேர்ந்த ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார். பின் மேயர் அறை சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அவர் பதவியேற்று, 3 ஆண்டான நிலையில் தற்போது பொது பிரிவு செயல்பட்டு வந்த பகுதிக்கு, மேயர் அறையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த அலுவலக இருக்கைகள் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் உள்ள டைல்ஸ், துாணில் உள்ள டைல்ஸ்களை பெயர்த்தெடுக்கும் பணி, இரு நாட்களாக நடந்து வருகிறது.இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:சில மாதங்களாக மாநகராட்சியில் பல்வேறு பிரச்னைகள் எழுந்து வருகின்றன. தி.மு.க., கவுன்சிலர்களே நிர்வாகத்தை குறைகூறி வெளிநடப்பு செய்யும் குளறுபடி நடக்கிறது. அதிகாரிகள், நேரடியாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கட்டுப்பாட்டில் செயல்படுவதால், கவுன்சிலர்கள், மேயர் உள்ளிட்ட கட்சியினரை மதிப்பதில்லை. இதனால் மரியாதை, வருவாய் என அனைத்தும் குறைந்து வருகிறது.இதற்கு மேயர் அறை உள்ள இடம் வாஸ்துபடி சரியில்லை என யாரோ ஆலோசனை கூறியுள்ளனர். இதனால் குபேர மூலையில் இருந்த பொதுப்பிரிவு அலுவலகம் மாற்றப்பட்டு, அங்கு புதிதாக மேயர் அறை அமைக்கப்பட உள்ளது. இதற்கு, 50 லட்சம் முதல், 70 லட்சம் ரூபாய் வரை செலவிடப்படலாம். வாஸ்து பூஜை போடப்பட்டு பணி தொடங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.வாஸ்துபடி அறையை மாற்றுவதாக கூறி, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படுகிறது. ஆனால் எந்த திட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது என்ற விபரம் உள்ளிட்டவை குறித்து, மாநகராட்சி தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், பணி மட்டும் நடந்து வருவது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.