நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆத்துார் :ஆத்துார் நகராட்சி அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மா.கம்யூ., தாலுகா செயலர் முருகேசன் தலைமை வகித்தார். அதில், ஒப்பந்த துாய்மை பணியாளர்களிடம், 20 மாத பிடித்தம் செய்த, இ.பி.எப்., - இ.எஸ்.ஐ., பணத்தை ஒப்பந்தாரர் செலுத்தவில்லை.மேலும் நவீன கொத்தடிமைகளாக பயன்படுத்துவதால், தனியாருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர் திட்டத்தை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என நகராட்சி கமிஷனரிடம் முறையிட்டபோதும் நடவடிக்கை இல்லை என கோஷம் எழுப்பினர்.மேலும் நகராட்சி நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். சி.ஐ.டி.யு., நிர்வாகிகள், ஒப்பந்த பணியாளர்கள் பங்கேற்றனர்.