ஆத்துார்: ஆத்துார் அருகே, மஞ்சினி பகுதியில் நேற்று, தேர்தல் பறக்கும்படை அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அஜித்கண்ணா, 40, என்பவர் ஆவணங்கள் இல்லாமல், இரண்டு லட்சம் ரூபாயை காரில் எடுத்துச் சென்றார். அந்த பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினியிடம் ஒப்படைத்தனர்.* தலைவாசல் அருகே, நத்தக்கரை சுங்கச்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஞானபிரியா தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், மினி சரக்கு வேனை ஓட்டிச் சென்ற விழுப்புரம், டி.புதுப்பாளையத்தை சேர்ந்த சிலம்பரசன், 30, என்பவர், 82 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றார். அதற்கான ஆவணங்கள் இல்லாததால், அந்த பணத்தை பறிமுதல் செய்து, கெங்கவல்லி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனர்.* இடைப்பாடி சட்டசபை தொகுதியில், ஜோதிபாசு தலைமையிலான பறக்கும் படையினர், வனவாசி அருகே சீரங்கனுார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொலிரோ பிக்அப் வேனில், 65 அபூர்வா சேலைகள் இருந்தது. அவை இளம்பிள்ளையில் உள்ள, ஜவுளி கடைக்கு கொண்டு செல்லப்பட இருந்தது. ஆவணங்கள் எதுவும் இல்லாததால், 36 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 65 சேலைகளை பறிமுதல் செய்யப்பட்டது.* நாமக்கல் லோக்சபா, சங்ககிரி சட்டசபை தொகுதியில் சித்திரகோவில் சமுதாயக்கூடம் அருகில், பூலாம்பட்டி செயல்அலுவலர் ஜீவானந்தம் தலைமையிலான பறக்கும்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது சேலம் கிழக்கு தாலுகா, முருங்கபட்டியை சேர்ந்த சரவணன்-, 40, என்பவர் தன்னுடைய ஸ்கூட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி, 5 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் கொண்டு சென்றார். வாகனத்துடன் பணத்தை கைப்பற்றி, சங்ககிரி சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.டி.ஓ., லோகநாயகியிடம் ஒப்படைத்தனர்.