உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுய தொழில் தொடங்க மானியம்: ஆதரவற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம்

சுய தொழில் தொடங்க மானியம்: ஆதரவற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம்

சேலம், ஆதரவற்ற மகளிர் சுய தொழில் தொடங்க மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:சமூக நலன், மகளிர் உரிமை துறையில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற, ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சி வழங்குதல் போன்ற திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் வாழ கைம்பெண்கள், மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதள பயன்பாடு தொடங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பதிவு செய்யும் உறுப்பினர்கள், சமூக நல துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஓய்வூதியம், தற்காலிக தங்குமிடம், திறன் வளர்ப்பு பயிற்சி, சுய தொழில் செய்ய மானியம் உள்ளிட்ட பிற உதவிகளை பெறலாம்.சுயதொழில் தொடங்க மானியம் பெற தகுதியான கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயது வரம்பு, 25 முதல், 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம், 1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் என்பதற்கான சுய அறிவிப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ரேஷன், ஆதார் கார்டு நகலுடன் வசிப்பிட முகவரிக்கு ஒரு சான்றிதழ் இணைத்து விண்ணப்பிக்கலாம். சேலம் கலெக்டர் அலுவலக அறையின், 126ல் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை