மூதாட்டியை கொடூரமாக தாக்கி போன் வாங்கிய மாணவி கைது
ஓமலுார்:சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டியை சேர்ந்தவர் போதம்மாள், 65. இவரது கணவரும், மகனும் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டனர். மதியம், 3:00 மணிக்கு உறவினரின், 16 வயது சிறுமி ஒருவர், போதம்மாள் வீட்டுக்குள் திடீரென வந்தார். களை கொத்தும் சம்மட்டியால் போதம்மாளை சரமாரியாக தாக்கினார். பின் அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தியை பறித்து தப்பினார்.மாலையில் அவரது குடும்பத்தினர் வந்தபோது ரத்த வெள்ளத்தில் மூதாட்டி கிடந்தார். உடனே அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போதம்மாள் மகன் சக்திவேல் நேற்று அளித்த புகார்படி, ஓமலுார் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவியை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சிறுமி புதிதாக மொபைல் வாங்க வேண்டும் என்ற ஆசையில் மூதாட்டியை கொடூரமாக தாக்கி நகையை பறித்து, ஓமலுார், கடைவீதியில் உள்ள ஒரு கடையில் நகையை அடகு வைத்து பணமும் பெற்றார்' என்றனர்.