மர்ம விலங்கு கடித்து 3 நாட்களில் 13 ஆடுகள் பலி
தாரமங்கலம், தாரமங்கலம் அருகே, செலவடை ஊராட்சி வெண்ணம்பட்டியை சேர்ந்த சின்னபிள்ளை, 50, என்பவர், 14 ஆடுகளை வீட்டின் அருகில் வழக்கம் போல் நேற்று முன்தினம் பட்டியில் அடைத்து, துாங்க சென்றார்.நேற்று காலை, 10:30 மணிக்கு பார்த்தபோது, ஒரு ஆடு குடல் சரிந்து இறந்த நிலையில், 11 ஆடுகளின் கழுத்து, கண்களில் மர்ம விலங்கு கடித்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த பகுதியில் பார்த்த போது, இரும்பு கம்பியால் அமைத்த பட்டியில், இரு கம்பிகளை மர்ம விலங்கு வளைத்து, பட்டி உள்ளே சென்று ஆடுகளை கடித்தது தெரிந்தது. தாரமங்கலம் கால்நடை மருத்துவமனையில், ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.அப்பகுதி மக்கள் கூறுகையில்,'கடந்த மூன்று நாட்களில் கூச்சங்காடு, செலவடை, கொச்சம்பட்டியில், 29 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்துள்ளன. கூண்டு அமைத்து மர்ம விலங்கை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.ஓலைப்பட்டி கால்நடை மருத்துவர் கோபி கூறுகையில்,''இதுவரை இந்த பகுதியில் மர்ம விலங்கு கடித்ததில், 13 ஆடுகள் இறந்துள்ளன. அதில், 6 ஆடுகள் பிரேத பரிசோதனை செய்ததில் சிறுத்தை போன்ற விலங்குகள் கடித்ததற்கான அறிகுறிகள் இல்லை. சிலர் காட்டு நாய் கடித்ததாகவும் கூறுகின்றனர்,'' என்றார்.