சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து புதுச்சேரி, விழுப்புரத்தை சேர்ந்த 20 பேர் காயம்
ஆத்துார் :ஆத்துாரில், சுற்றுலா வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் பகுதியை சேர்ந்த, 20 பேர் காயமடைந்தனர்.கடலுார், பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம், 58. இவரது குடும்பத்தினர், நண்பர்கள் என, 19 பேர் நேற்று புதுச்சேரியில் இருந்து, கோவை மருதமலை மற்றும் கேரளா ஆலப்புழாவுக்கு, சுற்றுலா செல்வதற்காக வேனில் வந்தனர். விழுப்புரம், கோட்டைக்குப்பத்தை சேர்ந்த அப்துல்ஹமீது, 27, வேனை ஓட்டி வந்தார்.நேற்று காலை, 10:40 மணியளவில் ஆத்துார் புறவழிச்சாலை வழியாக வந்தபோது, செல்லியம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், டிரைவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்ட நிலையில், டிரைவர் நிலை தடுமாறியதால், கட்டுப்பாட்டை இழந்த வேன், முன்னால் சென்ற 'ஹீரோ - ஸ்பிளண்டர்' மீது மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அப்பகுதியினர் மற்றும் ஆத்துார் ஊரக போலீசார், வேனில் சிக்கியிருந்தவர்களை மீட்டு, ஆம்புலன்சில் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைக்கில் சென்ற திருவண்ணாமலை, ஆனந்த நகரை சேர்ந்த மணிகண்டன், 31, சுற்றுலா வேனில் பயணம் செய்த, விழுப்புரம் லியாகத்அலி, 42, புதுச்சேரி ரெட்டியார்குப்பம் வனஜா, 65, ஜெயக்குமாரி, 53, சாந்தி, 54, உமாமகேஸ்வரி, 45, ராணி, 65, கடலுார், பண்ருட்டி சண்முகம், 58, சூர்யா, 22, உள்பட மொத்தம், 20 பேர் காயமடைந்த நிலையில், ஆத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, டி.எஸ்.பி., சதீஷ்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.