281 கைவினை கலைஞருக்கு ரூ.6.74 கோடி கடனுதவி
சேலம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று, கலைஞர் கைவினை திட்டத்தை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் நேரலை, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கைவினை கலைஞர்கள், தொழில் முனைவோர் பார்வையிட்டனர். பின் கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: கைவினை கலைஞர்களின் வளர்ச்சிக்கு நிதித்தேவை முதன்மை தடையாக இருப்பதை கண்டறிந்து, அரசு திட்டத்தில் ஆண்டுக்கு, 10,000 கைவினை கலை மற்றும் தொழில் புரிவோருக்கு, அவர்களின் கலை தொழிலை நவீன சந்தைப்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கவும், 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கவும், இத்திட்டம் வழிவகை செய்கிறது. கலை தொழிலில், 5 ஆண்டு அனுபவம் உள்ள, 35 வயது நிரம்பிய எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். 25 சதவீத மானியத்தில், 3 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெறலாம். 5 சதவீதம் வரை வட்டி மானியம் உண்டு. பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப்பொருள், காலணி, மீன்வலை தயாரித்தல், சிகை அலங்காரம், அழகு கலை, துணி நெய்தல், பனை ஓலை, மரம், சிற்பம், பாசிமணி, கண்ணாடி வேலைப்பாடு, கற்சிலை வடித்தல், ஓவியம் தீட்டுதல், வண்ணம் பூசுதல், துணி வெளுத்தல், தேய்த்தல் போன்ற கைவினை தொழில் செய்வோர், இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். மாவட்டத்தில் கடந்த மார்ச், 31 வரை, 2,155 விண்ணப்பம் பெறப்பட்டு, 1,178 விண்ணப்பம் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டு, 281 பேருக்கு, 6.74 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், 1.19 கோடி ரூபாய் மானிய தொகைக்கு கடன் ஒப்புதல் ஆணை பெறப்பட்டுள்ளது. தகுதியுடையோர், msmeonline.tn.gov.inஎன்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு, 'பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 5 ரோடு, சேலம் - 636004' என்ற அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.இவ்வாறு அவர் பேசினார்.