கொள்ளை போன 2.85 கிலோ நகைகள் மீட்பு
சங்ககிரி:கோவையை சேர்ந்த தங்க நகை பட்டறை உரிமையாளர் சீனிவாசனிடம் வேலை செய்யும் சங்கர், 44, செப்., 15ல், 2.50 கோடி ரூபாய் மதிப்பில், 3 கிலோ நகைகளை, புதுச்சேரியில் உள்ள நகை கடைக்கு, கோவையில் இருந்து, ஆம்னி பஸ்சில் கொண்டு சென்றார். சேலம் மாவட்டம், சங்ககிரி சுங்கச்சாவடி அருகே, பேக்கரியில் பஸ் நிறுத்தப்பட்ட போது, நகை கொள்ளை போனது. தம்மம்பட்டி போலீசார் விசாரித்தனர். சங்ககிரியில் பஸ் நின்றபோது, நகை பையுடன் ஒருவர் இறங்கி, 'புல்லட்'டில் ஏறிச்சென்றது தெரிந்தது. புல்லட் உரிமையாளர், கோவை, புதுசித்தா புதுாரை சேர்ந்த பாலசுப்ரமணியம், 52, என தெரிய வந்தது. இவரும் சீனிவாசனின் நகை பட்டறையில் பணிபுரிந்து, ஆறு மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நின்றார். நேற்று அதிகாலை, பாலசுப்ரமணியம், அவரது நண்பரான, கடலுார் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த மெரிஜா, 28, ஆகியோரை கைது செய்த போலீசார், 2.85 கிலோ நகைகளை மீட்டனர்.