ரூ.333 கோடியில் மேற்கொள்ளும் பணிகள்; உரிய காலத்தில் முடிக்க கலெக்டர் அறிவுரை
தலைவாசல் : தலைவாசல், கெங்கவல்லி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார். அப்போது காமக்காபாளையத்தில், தேசிய ஊரக வேலை திட்டத்தில் குளம் அமைத்தல்; லத்துவாடி ஊராட்சியில் மேல்நிலை தொட்டி; கிழக்குராஜாபாளையத்தில் ஊராட்சி அலுவலகம், கலைஞர் கனவு இல்லம் மட்டுமின்றி நாவக்குறிச்சி, நாகியம்பட்டி, தம்மம்பட்டி, கொண்டையம்பள்ளி உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.தொடர்ந்து அவர் கூறியதாவது: தலைவாசலில், 35 ஊராட்சிகளில், மூன்றரை ஆண்டுகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், கலைஞர் கனவு இல்லம், அண்ணா மறுமலர்ச்சி, பள்ளிகள் உட்கட்டமைப்பு, நபார்டு உள்பட பல்வேறு திட்டங்களில், 7,418 பணிகளுக்கு, 193.79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 5,610 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதி, 1,808 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதேபோல் கெங்கவல்லியில், 14 ஊராட்சிகளில், 4,121 பணிகளுக்கு, 139.98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2,369 பணிகள் முடிந்த நிலையில், மீதி, 1,752 பணிகள் நடக்கின்றன.தலைவாசல், கெங்கவல்லி ஒன்றியங்களில், 333.77 கோடி ரூபாயில் மேற்கொள்ளும் பணிகளை தரமான முறையில், உரிய காலத்தில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.மேலும் ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கலைஞர் மகளிர் உரிமை திட்ட பதிவேடுகள், தடையாணை பதிவேடுகள், விசாரணை பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்களை, கலெக்டர் பார்வையிட்டார்.