உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துாத்துக்குடி ரவுடி கொலையில் 4 பேர் கைது

துாத்துக்குடி ரவுடி கொலையில் 4 பேர் கைது

சேலம், சேலத்தில், துாத்துக்குடியை சேர்ந்த ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேரை திண்டுக்கல்லில் வைத்து, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.துாத்துகுடி மாவட்டம், ஆரோக்கியபுரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் மதன்குமார், 28. இவரது மனைவி மோனிஷா, 24. இவர்களுக்கு ரவுசியா, 4, என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த ஏப்ரலில் கப்பல் மாலுமி மரடோனா என்பவரை, கொலை செய்த வழக்கில் மதன்குமார் கைது செய்யப்பட்டு, சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து இட வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் காலை அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற மதன்குமார், கையெழுத்து போட்டு விட்டு, அங்குள்ள அரசு போக்குவரத்து பணிமனை எதிரே உள்ள ஓட்டலில், மனைவியுடன் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென, 6 பேர் கொண்ட கும்பல், ஓட்டலில் புகுந்து வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மதன்குமாரின் கையை தனியாக வெட்டி டேபிளில் வைத்து விட்டு சரமாரியாக தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட, 20 இடங்களில் வெட்டினர்.இதில் ரத்த வெள்ளத்தில் மதன்குமார் துடிதுடித்து உயிரிழந்தார். அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கொலையாளிகள் திண்டுக்கல்லில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, தனிப்படை போலீசார் திண்டுக்கல் விரைந்தனர். துாத்துக்குடியை சேர்ந்த ஹரிபிரசாத், 26, ஜெயசூர்யா, 26, அந்தோணி, 24, சந்தோஷ், 22, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது: முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 2019ல், டாஸ்மாக் கடையில் குட்டி என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், மதன்குமார் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்து கட்ட பஞ்சாயத்து செய்து வந்துள்ளார். அப்போது, எதிர்கோஷ்டியை சேர்ந்த ஹரிபிரசாத் உள்ளிட்ட கூட்டாளிகளுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மதன்குமாரை கொலை செய்ய ஹரிபிரசாத் தரப்பினர் திட்டம் தீட்டியிருந்தனர்.கடந்த ஆண்டு மதன்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட நிலையில், அவரது கைவிரல்கள் மட்டும் வெட்டப்பட்ட நிலையில் தப்பினார். அதன் பிறகுதான் வேறு ஒரு விவகாரத்தில், மரடோனாவை மதன்குமார் கொலை செய்ததும், பின்னர் சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட சென்றுள்ளதை அறிந்த, ஹரிபிரசாத் கூட்டாளிகள், சேலம் வந்து நேற்று முன்தினம் வெட்டி சாய்த்துள்ளனர். கொலை வழக்கில் மேலும் இருவரை தேடி வருகிறோம்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி