உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புரட்டாசி 4வது சனி:பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி 4வது சனி:பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

சேலம்:புரட்டாசி, 4வது மற்றும் கடைசி சனியை ஒட்டி, சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் நேற்று, மூலவர் அழகிரிநாதர், சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் நாச்சியார், சிங்கமுக ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் பத்மாவதி தாயார், ஆண்டாளுடன், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார். பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு முத்தங்கி அணிவிக்கப்பட்டிருந்தது. இரவு அனுமந்த வாகனத்தில் பெருமாள், முக்கிய வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார். அம்மாபேட்டை சவுந்தரராஜர், பட்டைக்கோவில் வரதராஜர், செவ்வாய்ப்பேட்டை வெங்கடேச பெருமாள், 2ம் அக்ரஹாரம் லட்சுமி பெருமாள், முதல் அக்ரஹாரம் ஆஞ்சநேயர், அசோக் நகர் லட்சுமி வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும், திருக்கோடி ஏற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.குரங்குச்சாவடி அருகே உள்ள நகரமலை பெருமாள் கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் மலை மீது ஏறிச்சென்று சுவாமியை வழிபட்டனர். அம்மாபேட்டை நாமமலை உச்சியில் உள்ள ஸ்ரீநிவாசபெருமாள் கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேஷாத்ரி வாசனுக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. அம்மாபேட்டை சவுராஷ்டிரா பள்ளி அருகே சோழன் மேற்கு தெருவில் சுதர்சனா நண்பர் குழு சார்பில், 20ம் ஆண்டாக அலர்மேல் மங்கை தாயார் சமேத திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் ஸ்ரீவைஷ்ணவி தேவி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தாரமங்கலம், பாப்பம்பாடி சந்தைப்பேட்டை அருகே உள்ள சஞ்சீவிராய பெருமாள் கோவிலில், சந்தன காப்பு, துளசி, வெற்றிலையால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஆத்துார், கோட்டை வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவர் பூதேவி, ஸ்ரீதேவி சமேத பெருமாள் சுவாமிக்கு, பல்வேறு அபிேஷக பூஜை செய்யப்பட்டது. பின் புஷ்பம், துளசி மாலையுடன் ராஜ அலங்காரத்துடன், பெருமாள் அருள்பாலித்தார். ஆத்துார், கோட்டை குபேர ஆஞ்சநேயர், செந்துாரம் வெற்றிலை மாலை அலங்காரத்தில் அருள்பாலித்தார். தளவாய்பட்டி சன்னாசிவரதன் கோவிலில் புதிதாக கல் துாண் அமைத்து, விளக்கேற்றி வழிபட்டனர். நரசிங்கபுரம், விநாயகபுரம் கூட்ரோடு பகுதியில் உள்ள ரங்கநாதர் கோவிலில், மூலவர் திருவரங்கநாதர் வெள்ளி கவசத்திலும், பஞ்சமுக ஆஞ்சநேயர் புஷ்ப அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். சின்னமசமுத்திரம் கொப்புக்கொண்ட பெருமாள், ஆறகளூர் கரிவரதராஜர், வீரகனுார் கஜவரதராஜர், தம்மம்பட்டி உக்ரகதலி நரசிம்மர், தளவாய்பட்டி சன்னாசிவரதர், ஊனத்துார் அடிபெருமாள், புத்துார் ஸ்ரீனிவாச பெருமாள், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. தேரோட்டம் கோலாகலம்சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜர், உற்சவர் திருமேனிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. மூலவருக்கு தங்க கவசம் சார்த்தி பூஜை நடத்தப்பட்டது. காலையில் சர்வ அலங்காரத்தில் சவுந்தரராஜர், தேரில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பெண்கள், 'கோவிந்தா' கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தனர். மாலை, 6:00 மணிக்கு திருக்கோடி தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. இரவு, சவுந்தரவல்லி தாயாருடன் பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளி, 'ஏகாந்த சேவை'யில் காட்சியளித்தார். பக்தர்கள், பஜனை பாடல்களை பாடி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி