பீரோ பட்டறை உரிமையாளர் கொலை வக்கீல் உள்பட 7 பேர் கைது; 2 பேர் சரண்
பீரோ பட்டறை உரிமையாளர் கொலைவக்கீல் உள்பட 7 பேர் கைது; 2 பேர் 'சரண்'வாழப்பாடி, நவ. 10-நடுரோட்டில் பீரோ பட்டறை உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், வக்கீல் உள்பட, 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான, ரவுடி ஆனந்தனின் மைத்துனர் உள்பட, 2 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், வெள்ளியம்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 40. வெள்ளாளகுண்டத்தில் பீரோ பட்டறை வைத்துள்ளார்.இவர், நேற்று முன்தினம் காலை, குள்ளம்பட்டி, பனங்காடு அருகே நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார். காரிப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிந்தனர். சேலம் டி.ஐ.ஜி., உமா தலைமையில், 6 தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கடந்த, 2023 பிப்., 5ல் பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு சரவணன் பணம் தருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்தன் மைத்துனரான கார்த்தி தலைமையிலான கும்பல், சரவணனை திட்டமிட்டு தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்தது.'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில் விசாரித்ததில், திருச்செங்கோடு அருகே குற்றவாளிகள் பதுங்கியிருந்தது தெரிந்தது. அங்கு சென்ற தனிப்படையினர், அல்லிக்குட்டையை சேர்ந்த, ஆனந்தனின், மற்றொரு மைத்துனரான வக்கீல் கணேசன், 32, ஆனந்தனின் மனைவி சத்யா, 35, ஆனந்தனின் நண்பர்களான பொன்னம்மாபேட்டை ஜீவன்ராஜ், 25, கருப்பூர் சாரதி, 22, சூர்யா, 26, காமலாபுரம் பன்னீர்செல்வம், 29, அல்லிக்குட்டை ஆனந்த், 26, ஆகியோரை கைது செய்தனர். தற்போது அவர்கள் ஆத்துார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆனந்தனின் மைத்துனர் கார்த்தி, அவரது நண்பர் கந்தசாமி, போலீசில் சரண் அடைந்துள்ளனர்.அதேபோல் கொலை செய்ய பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனந்தன் கொலைக்கு, குற்றவாளிகளுக்கு சரவணன் பணம் உள்ளிட்டவை உதவி செய்து பக்கபலமாக இருந்ததால் அவரை தீர்த்துக்கட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சில குற்றவாளிகள் நாளை (இன்று) சரணடைய வாய்ப்புள்ளது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.