திருமணிமுத்தாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பலி
எலச்சிபாளையம்: திருமணிமுத்தாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விவசாயி, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமம், அரசரடிக்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி, 64; கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கறந்த பாலை கொன்னையார் பகுதி மக்களுக்கு ஊற்றுவதற்காக, வீட்டில் இருந்து பால்கேனுடன், 'டி.வி.எஸ்.,' மொபட்டில், திருமணிமுத்தாற்றின் குறுக்கே உள்ள சிறுபாலத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்பட்டதால், பாலத்தில் இருந்து கீழே விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.இதை அங்கிருந்து பார்த்தவர்கள், உடனடியாக திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின், காலை, 9:30 மணியளவில், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கையில் பால் கேனுடன் உயிரிழந்த நிலையில் பெரியசாமியை மீட்டனர். இதுகுறித்து, எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.