சேலம், ஓமலுார், கோட்டகவுண்டம்பட்டி, வசந்தம் நகரை சேர்ந்த, மாற்றுத்திறனாளி கோபால். இவர் அரசு விடுதியில் காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சில மாதங்களுக்கு முன், உறவினர் நிகழ்ச்சிக்கு, ரயிலில் சென்னை செல்லும்போது, முருகேசன் என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது அவர், கோபாலிடம், மொபைல் எண்ணை பெற்றுக்கொண்டார்.பின் முருகேசன், கோபாலுக்கு போன் செய்து, 'மத்திய ரயில்வேயில் வேலை உள்ளது. அதற்கு, 5 லட்சம் ரூபாய் செலவாகும்' என கூறியுள்ளார். அதை நம்பிய கோபால், அவரது பேரனுக்கு வேலை வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அவர் பணத்தை தயார்படுத்த அறிவுறுத்தினார். இதனால் மருமகனிடம் கூறி கடந்த ஆகஸ்டில், 'கூகுள்பே' மூலம் பல்வேறு பரிவர்த்தனையாக, 2.64 லட்சம் ரூபாய், நேரடியாக, 1 லட்சம் ரூபாயை, கோபால், முருகேசனுக்கு கொடுத்தார்.சிறிது நாளுக்கு பின், வேலை வாங்கி தராததால், பணத்தை திருப்பி கேட்டார். இதையடுத்து, அவர் மொபைல் போனை அணைத்து வைத்துவிட்டார். ஏமாற்றப்பட்டதை அறிந்த கோபால், கருப்பூர் போலீசில் கடந்த, 7ல் புகார் தெரிவித்தார்.போலீசார் விசாரணையில், முருகேசன் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததும், கடந்த செப்டம்பரில், கெங்கவல்லியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, வாலிபரிடம் பல லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர் என்பதும் தெரிந்தது. அவரை, போலீசார் தேடி வருகின்றனர்.