உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆச்சா மர கருப்பணாருக்கு காவு சோற்று பானை வீச்சு

ஆச்சா மர கருப்பணாருக்கு காவு சோற்று பானை வீச்சு

பனமரத்துப்பட்டி: பிடாரி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஆச்சா மரத்தில் வசிக்கும் கருப்பணார் சுவாமிக்கு காவு சோற்று பானை வீசப்பட்ட நிகழ்வு நடந்தது.பனமரத்துப்பட்டி அருகே குரால்நத்தத்தில் எட்டுப்பட்டி பிடாரி அம்மன் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு சமைத்து சாப்பிட்டனர். காவல் தெய்வமான கருப்பணார் சுவாமிக்கு, காவு சோறு பறிமாறும் வினோத நிகழ்வு தொன்று தொட்டு நடந்து வருகிறது. அதன்படி கோவில் வளாகத்தில், 100 ஆண்டு பழமையான ஆச்சா மரத்தில் கருப்பணார் சுவாமி குடிகொண்டிருப்பதாக மக்கள் நம்பிக்கை வைத்து வழிபடுகின்றனர்.இதனால் நேற்று முன்தினம் இரவு, ஆச்சா மர கருப்பணார் சுவாமிக்கு காவு சோறு போடும் நிகழ்வு நடந்தது. பூசாரிகள், புது பானையில் பொங்கல் வைத்து ஆட்டு குட்டியை பலியிட்டு, அதன் ரத்தத்தை பொங்கல் சோற்றில் கலந்து காவு சோறு தயார்படுத்தினர். மக்கள், பக்தர்கள் உள்ளிட்டோர், கோவில் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின் மர உச்சியை நோக்கி, 'கருப்பணாரே பிடிச்சுக்கோ' என கூறி, காவு சோறு பானையை மேல் நோக்கி வீசிவிட்டு பூசாரிகள் திரும்பி பார்க்காமல் சென்றனர். மர உச்சியில் உள்ள கருப்பணார், காவு சோற்று பானையை பிடித்து கொள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த வினோத நிகழ்வு ஆண்டுதோறும் தொடர்ந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ