ஆர்.டி.ஓ., ஆபீஸில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு; ரூ.1.26 லட்சம் பறிமுதல்
ஆத்துார்: ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, குடிநீர், யு.பி.எஸ்., பெட்டி, தரையில் சிதறிக்கிடந்த, 1.26 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்துாரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின்படி, நேற்று மாலை, 4:00 மணியளவில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட போலீசார் அலுவலகத்தின் வழிப்பாதை, வெளிப்புற பகுதிகளை பூட்டிவிட்டு சோதனை நடத்தினர்.தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்.டி.ஓ.,) ரகுபதியின் 'ரெனால்டு - டஸ்டர்' கார், அலுவலகம் வளாக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணியாளர்களின் மொபட், பைக் உள்ளிட்டவைகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது, ஆர்.ஓ., வாட்டர், பேட்டரிகளின் மேற்புற பெட்டிகள் மீது பணக்கட்டுகளும் மற்றும் வளாக பகுதியில் கணக்கில் வராத ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன. இதில், மொத்தம் ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து, 500 ரூபாய் இருப்பதை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.இந்த பணம் தொடர்பாக, ஆர்.டி.ஓ., அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். மாலை 4:00 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு, 9:00 மணிக்கு மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது.