4 ஆண்டில் 2,055 விவசாயிகளுக்கு ரூ.31 கோடியில் உதவிகள் வழங்கல்
ஆத்துார், ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திர பராமரிப்பு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், முகாமை தொடங்கிவைத்து, 25 தனியார் வேளாண் இயந்திரங்கள், கருவிகள், சூரிய ஒளி மின்மோட்டார், சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட அரங்குகளை பார்வையிட்டார்.தொடர்ந்து அமைச்சர் கூறியதாவது: வேளாண் இயந்திரங்கள், கருவிகள் இயக்குதல், பராமரித்தல், செய்யக்கூடியது, செய்யக்கூடாதது, பழுது கண்டறிதல் குறித்து, விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டில், 1,076 விவசாயிகளுக்கு, 15.54 கோடி ரூபாய் மானியம், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 700 விவசாயிகளுக்கு, 7.07 கோடி ரூபாய் அளவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.எம்.பி., மலையரசன், முன்னாள் எம்.எல்.ஏ., சிவலிங்கம், வேளாண் இணை இயக்குனர் சிங்காரம், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் குமரன் உள்பட பலர் பங்கேற்றனர்.