அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
மேட்டூர்:மேச்சேரி, மல்லிகுந்தம் ஊராட்சி, 8வது வார்டு மற்றும் ஜீவா நகரில் ஆதி திராவிடர், அருந்ததியர் மக்கள், வி.சி., கட்சியினர், நேற்று காலை, 10:00 மணி முதல், ஊராட்சி அலுவலகம் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். வி.சி., விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதை அறிந்து, அங்கு வந்து மேச்சேரி பி.டி.ஓ.,க்கள் பெருமாள், அருளாநத்தம் பேச்சு நடத்தினர். அப்போது, 'புது மேல்நிலை தொட்டி அமைத்து குடிநீர் வினியோகிக்க வேண்டும். பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பொது கிணற்றை துார்வார வேண்டும். வீதிகளில் குப்பை, தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்' என, மக்கள் வலியுறுத்தினர்.உடனே குப்பை, கழிவுநீரை, துாய்மை பணியாளர்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக, பி.டி.ஓ.,க்கள் தெரிவித்ததால், 3 மணி நேர போராட்டத்தை கைவிட்டனர். பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் இளவரசன், மாநில துணை செயலர் தமிழ்செல்வன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கலைசெல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.