மின் தகன மேடை அமைக்க எதிர்ப்பு பூமி பூஜை விழா தற்காலிக நிறுத்தம்
வாழப்பாடி, நவ. 21-வாழப்பாடி, பேளூர் முதல்நிலை டவுன் பஞ்சாயத்தில், தமிழக அரசின் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 1.76 கோடி ரூபாய் செலவில் மின் தகன மேடை அமைக்க, நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, 12வது வார்டு, சந்தைப்பேட்டை பின்புறமுள்ள மயானத்தில், டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் இடம் தேர்வு செய்தது. அங்கு கட்டுமானப்பணி தொடங்க, பூமி பூஜை போட முன்னேற்பாடு செய்யப்பட்டது. இதை அறிந்த மக்கள், வெளியூரில் இருந்து உடல் வரும் சந்தைப்பேட்டை, திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ள பகுதியில், எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து டவுன் பஞ்சாயத்து தலைவி ஜெயசெல்வியிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் நேற்று நடக்கவிருந்த, மின் தகன மேடைக்கான பூமி பூஜை விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இதுகுறித்து பேளூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மணிவண்ணன் கூறுகையில், ''வேண்டுமென்றே குறிப்பிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விசாரிக்கப்படும்,'' என்றார்.