ஆசிரியரை தாக்கிய மாணவர் மீது வழக்கு
ஓமலுார்: சேலம் மாவட்டம், ஓமலுார், அமரகுந்தியைச் சேர்ந்தவர் முத்துசாமி, 55; அமரகுந்தி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர். அக்., 10ல், பிளஸ் 2 மாணவர்கள் இருவர், வகுப்பறை முன் சண்டை போட்டனர். முத்துசாமி இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினார். அதில், ஒரு மாணவர் வகுப்பறைக்கு சென்றார். மற்றொருவர் வீட்டுக்கு சென்று, பெற்றோரை அழைத்து வந்து ஆசிரியரிடம் பேசினார். அப்போது திடீரென மாணவர், ஆசிரியரின் சட்டையை பிடித்து கிழித்து, முகத்தில் தாக்கினார். தொளசம்பட்டி போலீசார், வன்கொடுமை உட்பட மூன்று பிரிவுகளில், மாணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.