வனப்பகுதியில் முருகன் கோவிலை அகற்ற எதிர்ப்பு10 பேர் மீது வழக்குப்பதிவு
கெங்கவல்லி::வனப்பகுதியில் அமைத்த முருகன் கோவிலை, வனத்துறையினர் அகற்ற முயன்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த, 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம், காந்தி நகர் பகுதி, வனப்பகுதி அடிவாரத்தில் உள்ளது. அங்கு சில ஆண்டுக்கு முன் கருமாரியம்மன், முருகன் கோவில் அமைத்து, மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்., 11ல், மலை மேல் வனப்பகுதிக்குள் சிலர், இரும்பு கூடாரம் அமைத்து புதிதாக முருகன் கோவில் அமைத்து வழிபட்டனர். மறுநாள் ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், புது கோவிலை அகற்ற முயன்றனர். அப்போது மக்கள், வனத்துறையினரை தடுத்து நிறுத்தி, 'விழா முடிந்ததும் அகற்றிக்கொள்ளப்படும்' என உறுதி அளித்தனர். சில நாட்களுக்கு முன், மீண்டும் கோவிலை அகற்ற வனத்துறையினர் சென்றபோது, மீண்டும் தடுத்து எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.இதனால், 74.கிருஷ்ணாபுரம், காந்தி நகர் சிவக்குமார், பூமாலை, செல்வம், விஜய், வசந்த், அஜித்குமார், சுரேஷ், சூர்யா, ஊமையன், சின்னதுரை என, 10 பேர் மீது, தமிழக வனப்பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து, நேற்று ஆத்துார் நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்தனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: வனப்பகுதி அடிவாரத்தை ஆக்கிரமித்து ஏற்கனவே கோவில் கட்டியுள்ளனர். தற்போது மலை மீதுள்ள காப்புக்காடு பகுதியில் கோவில் அமைத்துள்ளனர். இதை அகற்ற முயன்றபோது, தகராறு செய்ததால், 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கோவிலை அகற்றுவது தொடர்பாக, சேலம் கலெக்டர், ஆத்துார் வனக்கோட்ட அலுவலர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட துறையினருக்கு, அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு பின், 10 பேர் மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.