சாலைகளில் சுற்றும் கால்நடைகள் பறிமுதல்; உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும் முடிவு
சேலம்: சாலைகளில் சுற்றித்திரியும் மாடு, எருமை, குதிரைகளை பறிமுதல் செய்வதோடு அதன் உரிமையாளர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்க, மாநகராட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சேலம் மாநகராட்சி பகுதிகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, எருமை, குதிரை உள்ளிட்ட கால்நடைகளை, சாலைகளில் விடுவதால் விபத்துகள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகின்றன. இதனால் பொது இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து, மாநகராட்சி தொழுவத்தில் அடைத்து வைத்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பறிமுதல் செய்யப்படும் மாடு, எருமை, குதிரை ஆகியவற்றுக்கு தலா, 2,000 ரூபாய் அபராதம், 500 ரூபாய் பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும். 48 மணி நேர கெடுவை தாண்டினால், தினமும் கூடுதலாக, 500 ரூபாய் வசூலிக்கப்படும்.அதேபோல் ஆட்டிற்கு, 500 ரூபாய் அபராதம், 100 ரூபாய் பராமரிப்பு கட்டணம்; நாய்க்கு, 250 ரூபாய் அபராதம், 50 ரூபாய் பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்டு, 48 மணி நேரத்துக்குள் உரிமை கோராத கால்நடைகளை, பொது ஏலம் நடத்தி, அத்தொகையை மாநகராட்சி கணக்கில் சேர்க்கப்படும். ஏலம் போகாத கால்நடைகளை, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், விலங்குகள் நலனில் அக்கறை கொண்ட, விலங்கு நல ஆர்வலர்களிடம் ஒப்படைக்கப்படும். இதற்கான அனுமதி, நேற்றைய மாநகராட்சி கூட்டத்தில் பெறப்பட்டுள்ளது.உரிமம் பெறலாம். இதுதவிர மாநகராட்சியில் அனைத்து வகை கால்நடைகளுக்கும் உரிமம் வழங்கப்பட உள்ளது. அதன்படி நிபந்தனைகளுக்குட்பட்டு மாடு, எருமை, குதிரை ஆகியவற்றுக்கு, 100 ரூபாய், ஆடு, நாய்க்கு தலா, 50 ரூபாய் செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.