முதல்வர் கோப்பை மாநில செஸ் கோவை, மதுரை வீரர்கள் அசத்தல்
சேலம்: முதல்வர் கோப்பை பள்ளி மாணவர்களுக்கான, மாநில அளவிலான செஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் கோவை ஆகாஷ், பெண்கள் பிரிவில் மதுரை சஹானா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.சேலம் நேரு கலையரங்கில், முதல்வர் கோப்பைக்கான மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. 38 மாவட்டங்களில் இருந்து தலா, 38 மாணவர்கள், 38 மாணவியர் கலந்து கொண்டனர்.நேற்று நடந்த இறுதி போட்டியில், ஆண்கள் பிரிவில் கோவையை சேர்ந்த மாணவன் ஆகாஷ் முதலிடம் பிடித்தார். கடலுாரை சேர்ந்த மால்வின் ஜோஸ்வா இரண்டாமிடம், மதுரையை சேர்ந்த யஷ்வந்த் மூன்றாமிடம் பிடித்தனர்.பெண்கள் பிரிவில் மதுரையை சேர்ந்த சஹானா முதலிடம் பிடித்தார். சென்னையை சேர்ந்த சன்மதி இரண்டாமிடம், தேனியை சேர்ந்த சியோனிகா மூன்றாமிடம் பிடித்தனர். இரண்டு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களுடன், 1 லட்சம், 75 ஆயிரம், 50 ஆயிரம் பரிசுத்தொகை அவரவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதே போல் கல்லுாரி மாணவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி இன்று (அக்.,6) துவங்கி அக்.,8 வரையும், கேரம் போட்டி அக்., 8 முதல் 10 வரையும், அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கேரம் போட்டி அக்., 11 முதல் 13 வரை சேலம் நேரு கலையரங்கத்தில் நடக்கிறது.