உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பஸ்சில் இருந்து விழுந்த குழந்தை பலி கதவை மூடாத அலட்சிய டிரைவர் மீது வழக்கு

அரசு பஸ்சில் இருந்து விழுந்த குழந்தை பலி கதவை மூடாத அலட்சிய டிரைவர் மீது வழக்கு

சங்ககிரி:சங்ககிரி அருகே ஓடிக் கொண்டிருந்த அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்து, 9 மாத ஆண் குழந்தை பலியானது. பஸ்சில் தானியங்கி கதவு இருந்தும், அதை மூடாமல் அலட்சியமாக செயல்பட்ட டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம், கருங்கல்லுாரை சேர்ந்தவர் ராஜதுரை, 31. இவரது மனைவி முத்துலட்சுமி. தம்பதிக்கு 7 வயதில் மகள், 9 மாத ஆண் குழந்தை நவனீஷ் இருந்தனர். ராஜதுரை குடும்பத்துடன், கோவை மாவட்டம், ராமநாதபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து, கட்டட தொழிலாளியாக பணிபுரிகிறார்.ஒரு வாரத்துக்கு முன் தர்மபுரி வந்த ராஜதுரை, மீண்டும் குடும்பத்துடன் கோவை புறப்பட்டார். அதற்காக, நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து கோவை சென்ற அரசு பஸ்சில் ஏறினார். முத்துலட்சுமி, மகளுடன் வேறு இருக்கையிலும், ராஜதுரை, 9 மாத ஆண் குழந்தையுடன், பஸ் முன்பக்க படிக்கட்டிற்கு எதிரே உள்ள இருக்கையிலும் அமர்ந்திருந்தனர்.பஸ்சில் தானியங்கி கதவு இருந்தாலும், பின்பக்கக் கதவை மட்டும் மூடிவிட்டு, முன்பக்கக் கதவை மூடாமல், டிரைவர் அலட்சியாக பஸ்சை இயக்கியுள்ளார். இரவு, 10:15 மணிக்கு சங்ககிரி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், சங்ககிரி அடுத்த வளையக்காரனுார் மேம்பாலத்தில் பஸ் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, டிரைவர் திடீரென, 'பிரேக்' போட்டுள்ளார். அப்போது, ராஜதுரையின் இடது தோள்பட்டையில் துாங்கிக் கொண்டிருந்த குழந்தை நவனீஷ் நழுவி கீழே விழுந்தான்.ராஜதுரை சுதாரித்து குழந்தையை துாக்குவதற்குள், கதவு திறந்திருந்ததால், குழந்தை உருண்டு பஸ்சில் இருந்து கீழே விழுந்தது. ராஜதுரை கூச்சலிட, டிரைவர் பஸ்சை நிறுத்தினார். சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பரிசோதித்த டாக்டர், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார். ராஜதுரை புகாரின்படி, தேவூர் போலீசார், டிரைவர் சிவன்மணி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ