உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

சேலம்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சேலம், அழகாபுரம் புனித மிக்கேல் ஆலயத்தில், சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன், பங்குத்தந்தை எட்வர்ட் ராஜன் தலைமையில் சிறப்பு திருப்பலி நேற்று நள்ளிரவு நடந்தது. அதேபோல் அரிசிபாளையம் குழந்தை இயேசு பேராலயத்தில் பங்குத்தந்தை ஜோசப் லாசர் தலைமையிலும், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியர் ஆலயத்தில், மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப், பங்குத்தந்தை மரியஜோசப் அந்தோணி தலைமையில், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இரவு, 11:45 மணிக்கு மணி ஒலிக்கப்பட்டு, கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி தொடங்கியது. 12:00 மணிக்கு, குழந்தை இயேசு உருவத்தை, அந்தந்த ஆலய குடில்களில் பங்குத்தந்தையர்கள் கொண்டு போய் வைத்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். இதில் ஏராளமானோர், குடும்பத்தினருடன் வழிபட்டனர். தொடர்ந்து, 'கேக்' வெட்டி ஒருவருக்கொருவர் வழங்கி, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர்.அதேபோல் கலெக்டர் அலுவலகம் அருகே, சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் வில்சன் ஆசீர் டேவிட்; செவ்வாய்ப்பேட்டை லெக்லர் ஆலயத்தில் ஆயர் எழில் ராபர்ட் கெவின்; ஜங்ஷன் துாய பரிசுத்த ஆலயத்தில் ஆயர் சாந்தி பிரேம்குமார் தலைமையில், சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. சன்னியாசிகுண்டு புனித சூசையப்பர் தேவாலயம், கருப்பூர் ஆரோக்கிய அன்னை ஆலயம் என மாநகர் முழுதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஓமலுார், ஏற்காடு, ஆத்துார் கெங்கவல்லி, இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ