ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் குடிமகன்கள் தொல்லை
ஓமலுார், ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தின் ஒரு பகுதியாக, தினசரி காய்கறி சந்தை செயல்படுகிறது. டவுன் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. அதன் அருகே இரு டாஸ்மாக் கடைகள் உள்ளன. அந்த கடைகள் பூட்டியிருந்தாலும், சந்தை வளாகத்தில் ஆங்காங்கே கும்பல் கும்பலாக அமர்ந்து, பலரும் மது அருந்தி வருகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பயணியர் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் சந்தை வளாகத்தில் பல இடங்களில் மதுபாட்டில்கள் குவியல் குவியலாக கிடக்கின்றன. பொது இடங்களில் மது அருந்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர், காய்கறி வியாபாரிகள் வலியுறுத்தினர்.