கோவை எக்ஸ்பிரஸ் ரயில் பொம்மிடியில் நின்று செல்ல நடவடிக்கை: கோட்ட மேலாளர்
பாப்பிரெட்டிப்பட்டி: ''பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில், கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால் தெரிவித்தார்.தர்மபுரி மாவட்டம், பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தில், 15.18 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் கடந்த, 2024 பிப்., 26ல் தொடங்கி நடந்து வருகிறது. இப்பணிகளை, நேற்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால், முதன்மை திட்ட மேலாளர் கங்கராஜூ, கோட்ட வணிக மேலாளர் வர்சாசலோட்ரி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பணிகளை ஓரிரு மாதத்தில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.அப்போது, பொம்மிடி ரயில் பயணியர் சங்க நிர்வாகிகள் சிவசுப்பிரமணியம், ஜெபசிங், உள்ளிட்ட சிலர், கோவை, திருவனந்தபுரம், கொச்சுவேலி, நாகர்கோவில், உதய் ஆகிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்களை, பொம்மிடியில் நிறுத்த வேண்டும். நிறுத்தப்பட்ட அரக்கோணம் - சேலம் மெமு ரயிலை தினமும் இயக்க வேண்டும்.ஜோலார்பேட்டை - ஈரோடு பாசஞ்சர் ரயிலை முதல் பிளாட்பார்மில் நிறுத்த வேண்டும். இரண்டாவது பிளாட்பார்மில் கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக, கோட்ட மேலாளரிடம் அளித்தனர்.இதையடுத்து, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால் கூறுகையில், ''பொம்மிடி முதல் பிளாட்பாரத்தில் பாசஞ்சர் ரயில் நின்று செல்லவும், இரண்டாவது பிளாட்பாரத்தில் கழிவறை வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். கோவை எக்ஸ்பிரஸ் ரயில், பொம்மிடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.