அட ஆமாங்க... புதருக்குள்ள தாங்க ரோடு போகுது! பூச்சி தொல்லையும் தாங்க முடியல...
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டை அருகே, 11வது வார்டு, லட்சுமி நகரில் உள்ள ஒரு தெருவில், சிமென்ட் சாலை சேதம் அடைந்துள்ளது. அத்துடன் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி முட்புதராக மாறியதோடு, சாலை ஒத்தையடி பாதையாகவே மாறிவிட்டது.இதுகுறித்து லட்சுமி நகர் மக்கள் கூறியதாவது: இங்கு, 15 ஆண்டுக்கு முன் போடப்பட்ட சிமென்ட் சாலை, மேடு பள்ளமாக உள்ளது. மழை காலங்களில் சேறு, சகதியாக மாறிவிடுகிறது. இந்த வழியேதான் பனமரத்துப்பட்டி மக்கள், நத்தமேடு சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு சென்று வருகின்றனர். முக்கியமாக தெரு கடைசியில், 50 மீ., நீளத்தில், சாலையில் முட்செடிகள், கொடிகள் வளர்ந்துள்ளன. பாம்பின் வசிப்பிடமாகவே மாறியுள்ளது. தவிர புதரில் இருந்து வரும் பூச்சி தொல்லைகளால், குழந்தைகள், முதியவர்களுக்கு அரிப்பு, தடிப்பு ஏற்படுகின்றன. சாலையில் உள்ள புதரை அகற்ற பலமுறை டவுன் பஞ்சாயத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் தினமும் அவதிப்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.