த.வெ.க., கூட்ட நெரிசலில் சிக்கிய பெண்ணுக்கு ஆறுதல்
சேலம், நாமக்கல்லில் நடந்த, த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, அம்மாவட்டத்தில் உள்ள புதன்சந்தையை சேர்ந்த எழிலரசி, 24, என்பவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை, நேற்று மருத்துவமனையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின் அவர் கூறியதாவது:கூட்ட நெரிசலில் சிக்கிய எழிலரசிக்கு வலிப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஏற்கனவே ரத்த சோகை இருந்ததால் உடல்நிலை மோசமானது. சம்பவத்தன்று காலையில் அவர், உணவருந்தாமல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டதால் வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்வோம். மாவட்ட நிர்வாகம் சார்பில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மருத்துவக்கல்லுாரியில் ஒருவர், ஈரோடு மருத்துவமனையில் ஒருவர், கோவை கே.எம்.சி.,யில் ஒருவர் என, நாமக்கல் கூட்டத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவ்வாறு கூறினார்.