பெரியார் பல்கலை கழகத்தில் கல்லுாரி கல்வி ஆணையர் ஆய்வு
ஓமலுார், சுழற்சி முறையில், துறை தலைவர் மாற்றம் நடைபெறவில்லையா என, ஆய்வுக்கூடத்தில் கல்லுாரி கல்வி ஆணையர் சுந்தரவள்ளி கேள்வி எழுப்பினார். சேலம், பெரியார் பல்கலை கழக நிர்வாகக்குழு தலைவரும், கல்லுாரி கல்வி ஆணையருமான சுந்தரவள்ளி ஐ.ஏ.எஸ்., நேற்று பெரியார் பல்கலை கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பல்கலை தொழிலாளர் சங்க பொதுச்செயலர் சக்திவேல் தலைமையில் தொழிலாளர்கள், 100 பேருடன் சென்று, ஆணையரை சந்தித்து மனுக்களை வழங்கினர்.பின் பல்கலை கழக துறை தலைவர்கள் மட்டும் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில், பல்கலையில் உள்ள பிரச்னைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என, பேராசிரியர்களிடம் சுந்தரவள்ளி தெரிவித்தார். பின் எவ்வளவு நாளாக துறை தலைவர்களாக உள்ளீர்கள் என கேட்ட போது, சிலர் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ளதாக தெரிவித்த போது, இரண்டாண்டுக்கு ஒரு முறை துறை தலைவர் மாற்றம் நடக்கவில்லையா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பல்கலை கழகத்தை, சிறப்பாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.