உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கேவலமாக இருக்கிறது என கவுன்சிலர் கொந்தளிப்பு; மைக்கை எறிந்துவிட்டு வெளியேறிய தி.மு.க., கவுன்சிலர்

கேவலமாக இருக்கிறது என கவுன்சிலர் கொந்தளிப்பு; மைக்கை எறிந்துவிட்டு வெளியேறிய தி.மு.க., கவுன்சிலர்

சேலம்: சேலம் மாநகராட்சி கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்களே, நிர்வாகத்தை எதிர்த்து கொந்தளித்து பேசினர். தி.மு.க., கவுன்சிலர் குணசேகரன், மைக்கை எறிந்துவிட்டு, மேயருக்கு கும்பிடு போட்டுவிட்டு வெளியேறினார்.சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம், நேற்று காலை, 11:00 மணிக்கு மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் பேசிய விவாதம் வருமாறு:37 வது வார்டு திருஞானம்(தி.மு.க.,): அம்மாபேட்டை பகுதிகளில், 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. இதனால், பெண்கள் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.9 வது வார்டு தெய்வலிங்கம் (தி.மு.க.,): பாதாள சாக்கடை இணைப்பு தொகை உயர்வு குறித்த அரசாணையில், உள்ளாட்சி மன்றங்களில் வைத்து அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சேலம் மாநகராட்சியில், மன்றத்தின் கவனத்துக்கே கொண்டு வராமல், பாதாள சாக்கடை திட்ட இணைப்பு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அம்மாபேட்டை மண்டலத்தில், இரண்டு அதிகாரிகளிடையே, 'ஈகோ' தலைவிரித்து ஆடுகிறது.43 வது வார்டு குணசேகரன் (தி.மு.க.,): எனது வார்டில் பணிகள் எதுவும் முடிக்கப்படவில்லை. ஒப்பந்ததாரர் யார் என்பது தெரிவதில்லை. அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளையும் முடிப்பதில்லை. ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சிக்கு நிர்வாகத்துக்கு கட்டுப்பட்டு நடப்பவராக இருக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் வெங்கடாசலம், தஞ்சாவூர் சிவா இருவரும் வேலையே செய்வதில்லை. ஆகாயத்தில் இருந்து குதித்தவர்கள் போல் பேசுகின்றனர் என ஆத்திரத்துடன் மைக்கை டேபிள் மேல் எறிந்த கவுன்சிலர் குணசேகரன், நேராக மேயர் இருக்கை முன் சென்று, இரு கைகளையும் தலைக்கு மேல் துாக்கி, கும்பிடு போட்டுவிட்டு, மாமன்ற அரங்கை விட்டு வெளியேறினார்.26 வது வார்டு கலையமுதன்(தி.மு.க.,): சூரமங்கலம் பகுதியில், 45 சதவீதம் மட்டுமே பாதாள சாக்கடை திட்டப்பணி முடிந்துள்ளது. 55 சதவீதம் பணி பாக்கியுள்ள நிலையில், பணி முடிவுற்றது என தீர்மானத்தில் கூறியிருப்பது யார்? என்ன நடக்கிறது நிர்வாகத்தில்? முதல்வர் திறந்து வைத்த கட்டடத்தில், குடிநீர், கழிப்பறை வசதி முழுமையாக ஏற்படுத்தாமல், 8 மாதங்களாக பயன்பாட்டுக்கு வரவில்லை. பாதி வேலை நடந்து கொண்டிருக்கும் போது, ஏன் சிறப்பு நிதியிலிருந்து பணம் தரவேண்டும்? இதுவரை இப்படி ஒரு நிலை இருந்ததில்லை. ராஜினாமா செய்துவிட்டு போய்விடலாம் என இருக்கிறேன். கேவலமாக இருக்கிறது என பேசிவிட்டு, மன்றத்தை விட்டு வெளியே செல்ல முயன்றார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி, 'ஆளுங்கட்சியின் மூத்த கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்வதாக' என, பேச தொடங்கினார்.''நான் எங்கும் வெளி நடப்பு செய்யவில்லை. பாத்ரூம் செல்வதற்கு சென்றேன்,'' எனக்கூறிவிட்டு, மீண்டும் இருக்கைக்கு திரும்பினார் கலையமுதன்.36 வது வார்டு யாதவமூர்த்தி (அ.தி.மு.க.,) : வ.உ.சி., மார்க்கெட் ஏலம் 28ல் முடிவடையும் நிலையில், மாநகராட்சிக்கு வரியிழப்பு ஏற்படுத்தும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடையும் முன் எதற்கு வசூல் நடக்கிறது. 24 ரூபாய் இருந்த வரி, 84 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.அவர்களை வெளிநடப்பு செய்ய விடாமல், தி.மு.க., கவுன்சிலர்கள் தெய்வலிங்கம், முருகன் உள்ளிட்டோர் தடுக்க, மேயர் இருக்கை முன் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அதன் பின் வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி