டவுன் பஞ்.,கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள்
டவுன் பஞ்.,கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள்ஓமலுார், செப். 28-தொடர் அதிருப்தி காரணமாக, தி.மு.க.,-அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஒன்பது பேர், டவுன் பஞ்சாயத்து கூட்டத்தை புறக்கணித்தனர்.சேலம் மாவட்டம், ஓமலுார் டவுன் பஞ்., கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று, தி.மு.க.,வை சேர்ந்த தலைவி செல்வராணி தலைமையில் நடந்தது. இதில் சசிகுமார் (தி.மு.க.,), வெங்கடேஷ் (தி.மு.க.,), சாந்தி (தி.மு.க.,), ஆர்.புஷ்பா (அ.தி.மு.க.,), யசோதா (த.மா.கா.,) ஆகிய ஐந்து கவுன்சிலர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். மற்ற ஒன்பது கவுன்சிலர்கள் வருவார்கள் என, செயல் அலுவலர் நளாயினி உள்ளிட்டோர் காத்திருந்தனர். ஆனால் யாரும் வராததால், 11:00 மணிக்கு துவங்க வேண்டிய கூட்டம், 11:50 மணிக்கு துவங்கியது. 26 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது.கடந்த கூட்டத்தில், தலைவியின் செயல்பாடு மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, ஐந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். நேற்றைய கூட்டத்தில், துணைத்தலைவி ச.புஷ்பா (தி.மு.க.,), பெருமாள்சாமி (தி.மு.க.,), அன்பழகன் (தி.மு.க.,), சுமித்ரா (தி.மு.க.,), சசிகலா (தி.மு.க.,), காயத்திரிதேவி (தி.மு.க.,), லோகேஸ்வரி (தி.மு.க.,), உஷாராணி (அ.தி.மு.க.,), ராஜேந்திரன் (தி.மு.க.,) ஆகிய ஒன்பது பேர் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.இது குறித்து தலைவி செல்வராணி கூறுகையில்,'' துணைத்தலைவி புஷ்பா, பெருமாள்சாமி, காயத்திரிதேவி ஆகிய மூவரும் எங்களால் வர இயலாது என, தெரிவித்தனர். மற்றவர்கள் குறித்து எனக்கு தெரியாது,'' என்றார். செயல்அலுவலர் நளாயினி கூறுகையில்,'' தலைவி உட்பட, ஆறு கவுன்சிலர்கள் இருந்ததால் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,'' என்றார்.ஆளும்கட்சி தலைவி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.