உபரிநீர் போக்கி குட்டையில் செத்து மிதந்த மீன்கள்
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, அக்., 20ல் நிரம்பிய நிலையில், 16 கண் மதகு வழியே உபரிநீரின் ஒரு பகுதி வெளியேற்றப்பட்டது. அப்போது, கீழ் பகுதி காவிரியில் வசித்த ஏராளமான அரைஞ்சான், பஞ்சலை உள்ளிட்ட மீன்கள், உபரிநீர் போக்கி நோக்கி விரைந்தன. 16 கண் மதகில், உபரிநீர் வெளியேறிய பள்ளங்களில், ஏராளமான மீன்கள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டன. பின், அணை நீர்வரத்து குறைய, அக்., 27 இரவு, 16 கண் மதகில் உபரிநீர் நிறுத்தப்பட்டது. இதனால் உபரிநீர் போக்கியில் ஆங்காங்கே குட்டைகளில் வசித்த மீன்கள் வெளியேற வழியின்றி இருந்தன. நேற்று காலை முதல், ஏராளமான மீன்கள், நீருக்கு மேலே மிதக்க தொடங்கின. படிப்படியாக ஏராளமான மீன்கள் கூட்டம், கூட்டமாக செத்து மிதந்தன. மேட்டூர் மீன்வளத்துறை ஆய்வாளர்கள் சுப்ரமணி, கவிதா உள்ளிட்ட ஊழியர்கள், குட்டை நீரை, பாட்டிலில் சேகரித்து சோதனைக்கு எடுத்து சென்றனர். மீன்வளத்துறை அலுவலர்கள் கூறுகையில், ' தண்ணீர் குறைவாக இருந்த குட்டைகளில் ஒரு மடங்கு மீன்கள் இருக்க வேண்டிய இடத்தில், 4 மடங்கு மீன்கள் வசித்ததால், சுவாசிக்க நீரின் மேற்பகுதிக்கு வந்துள்ளன. எண்ணிக்கை அதிகரிப்பால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன' என்றனர்.