வடலுாரில் பன்னாட்டு மையம் அமைப்பதை நிறுத்த ஆர்ப்பாட்டம்
சேலம்: தெய்வத்தமிழ் பேரவை சார்பில் வடலுார் வள்ளலார் ஆன்மிக சத்தியஞான சபையில் பன்னாட்டு மைய கட்டடம் அமைப்பதை நிறுத்தக்கோரி, சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மேச்சேரி தமிழின குருபீடம் தமிழ் வேத ஆகம பயிற்சி பாடசாலை நிறுவன தலைவர் சத்தியபாமா தலைமை வகித்து பேசியதாவது: பார்வதிபுரம் கிராம மக்கள், தங்கள் நிலங்களை வள்ளலார் திருஞான சபைக்கு எழுதிக்கொடுத்தனர். அங்கு பன்னாட்டு பன்னோக்கு மையம் கட்ட முயற்சிக்கிறார்கள்.அதற்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கி கட்டடம் கட்டி வருமானம் பார்க்க நினைக்கிறார்கள். அதற்கு தோண்டப்பட்ட குழியை உடனே மூட வேண்டும். இல்லையெனில் நாங்கள், குழியை மூட தயாராக உள்ளோம். தமிழக அரசின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து அறநிலையத்துறை நடவடிக்கையை கண்டித்து கோஷம் எழுப்பினர். தமிழ் தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, சத்தியபாமா அறக்கட்டளை அறங்காவலர் தமிழ்மணி உள்பட பலர் பங்கேற்றனர்.