சேலத்தில் பணி நியமனங்களில் ஆதிக்கம் செலுத்தும் அ.தி.மு.க., எதிர்க்கட்சிகளுக்கு சலுகை வழங்குவதாக தி.மு.க.,வினர் குமுறல்
சேலத்தில் ரேஷன் கடை பணி நியமனங்களில், அ.தி.மு.க.,வினருக்கு சலுகை வழங்கியுள்ளதாக, தி.மு.க.,வினர் அக்கட்சி தலைமைக்கு புகார் அனுப்பியதுடன், புலம்பியும் வருகின்றனர்.சேலம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ௧௫௨ விற்பனையாளர், 10 கட்டுனர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதை நேரடி நியமனம் மூலம் நிரப்ப, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து, கடந்த, 2024ல், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் தகுதியானவர்களுக்கு, விற்பனையாளர் பணியிட நேர்முகத்தேர்வு, 2024 நவ., முதல், டிச., வரை நடந்தது. சமீபத்தில், இதற்கான பணியிடம் நியமனம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், அக்கட்சி ஒன்றிய செயலர்கள், தி.மு.க., மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளை, 'சரிகட்டி' 100க்கும் மேற்பட்ட பணியிடங்களை, கைப்பற்றியதாக, தி.மு.க.,வினர் புகார் கூறுகின்றனர். பா.ம.க., முக்கிய நிர்வாகிகள், 29 பணியிடங்களை எடுத்துக் கொண்டதாகவும், வசதி படைத்த தி.மு.க., அனுதாபிகள், 48 பணியிடங்களை எடுத்துக்கொண்டதாகவும், தி.மு.க., ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள், சார்பு அணி மாவட்ட செயலர்களுக்கு, இந்த வாய்ப்பு வழங்கவில்லை. தி.மு.க., நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு, பணியிடம் வழங்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.சேலம் மாவட்டத்தில், அ.தி.மு.க.,வின் கட்டுப்பாட்டில், தி.மு.க.,வினர் செயல்படுவதாக, தி.மு.க., தலைமைக்கு புகார் அனுப்பி உள்ளனர். முதல்வர் தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அவ்வாறு இல்லையெனில், தேர்தல் பணிகளையும், அ.தி.மு.க.,வினரை வைத்து பார்த்துக் கொள்ளட்டும் என, அதிருப்தி, தி.மு.க.,வினர் வெளிப்படடையாக புலம்பி வருகின்றனர்.இதுகுறித்து, கூட்டுறவுத்துறை பணியாளர்கள் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில், காலியாக இருந்ததாக அறிவித்த, 162 பணியிடங்களுக்கு, 2024ல், ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற்று, நேர்முகத் தேர்வும் நடந்தது. ஆனால், 2025 ஜூன் மாதம் ஓய்வு பெற்ற பணியிடங்கள், புதிதாக திறக்கப்பட்ட கடைகள், காலிப்பணியிடம் என, மொத்தம், 270 பணியிடங்களுக்கு பணி நியமனம் நடந்துள்ளது. பணி ஓய்வு பெற்றவர்களில் காலி இடங்களுக்கு, இரண்டு ஆண்டுக்கு பின் தான் நியமனம் இருக்கும். ஓய்வு முடிந்த ஒரு மாதத்தில், அந்த இடத்துக்கும் பணி நியமனம் செய்துள்ளனர்.அ.தி.மு.க., மாவட்ட செயலர் கூறியதற்காக, 100க்கும் மேற்பட்ட பணியிடம், அ.தி.மு.க.,வினருக்கு வழங்கினர். மீதி பணியிடம், தி.மு.க.,வுக்கு வழங்கப்பட்டது. இந்த முறை, சேலத்தை சேர்ந்த, தி.மு.க., 'தலை'யிடம் ஒப்புதல் பெற்று, கூட்டுறவுத்துறை அதிகாரிகளே, பணியிட நியமன பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாற்று கட்சியினருக்கு பணியிடம் வழங்கியதாக, ஆளும் கட்சியினர் வெளிப்படையாக புகார் கூறுகின்றனர்.இவ்வாறு கூறினர்.'பணம் வசூலிக்கவில்லை'சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில், 1,743 ரேஷன் கடைகள் உள்ளன. அதில், கடந்த ஓராண்டில், 54 கடைகளும், நான்கு ஆண்டுகளில், 154 புதிய கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. 2024ல், 152 விற்பனையாளர், 10 கட்டுனர்களுக்கு, நேர்முகத் தேர்வு நடந்தது. அதன்பின், புதிய கடைகள், ஓய்வு இடங்கள் என, 214 கடைகளுக்கு, விற்பனையாளர், கட்டுனர்கள் நியமனம் செய்ய வேண்டியிருந்தது.கடந்த, 2ல், 214 பேருக்கு, தகுதியின் அடிப்படையில் தான் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த, ஜூன் மாதம் விதிகள் மீறி கூடுதல் பணியிடம் எதுவும் நியமிக்கவில்லை. பணியாளர் நியமனத்தில் எந்த பணமும் வசூலிக்கவில்லை. ஆளும் கட்சி, எதிர்கட்சி என்று பணியிடம் வழங்கவில்லை. நேர்முகத்தேர்வு, கல்வித் தகுதி அடிப்படையில், பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. விதிமீறல் தகவல் இருந்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடை பணியாளர் நியமனத்தில் சிலர் தவறான தகவல் பரப்பி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.'நாங்கள் தலையிடவில்லை'அ.தி.மு.க., சேலம் மாவட்ட செயலர் இளங்கோவன் கூறுகையில், ''ஆளும் கட்சியாக, தி.மு.க., உள்ள நிலையில், அ.தி.மு.க.,வினருக்கு, எப்படி பணி நியமனம் வழங்குவர். என் பெயரை கூறியும், எங்களது கட்சி மீது தவறான தகவலை கூறுகின்றனர். நானோ, எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களோ, ரேஷன் கடை பணியாளர் நியமனத்தில் தலையிடவே இல்லை. மேடையில் நாங்கள், தி.மு.க.,வை திட்டி வரும் நிலையில், அ.தி.மு.க.,வுக்கு பணி நியமன சலுகை வழங்குவார்களா. -நமது சிறப்பு நிருபர்-இவ்வாறு அவர் கூறினார்.