இறைவனை ஆட்கொள்ள தொண்டு செய்! சைவ சமய பெரு விழாவில் தகவல்
சேலம்: உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், சைவ சமய பெருவிழா, சேலம், சண்முகா மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. அதில் ஜெயலட்சுமி, பிரியதர்ஷினி குத்துவிளக்கு ஏற்றினர். திருக்கூட்டத்தின் சேலம் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் கங்காதரன் வரவேற்றார். மாநில தலைமை ஆலோசகர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.அதில், 'இந்த மாதவர் கூட்டம்' தலைப்பில் சிவக்குமார் பேசுகையில், ''சிவத்தொண்டு செய்வது தான், இறைவனை ஆட்கொள்ளும் முதல்படி நிலை. அப்போது தான், சிவனுக்கு பூஜை செய்ய முடியும். பூஜை செய்வதற்கான பாக்கியமும் கிடைக்கும். தீட்சை பெற்றால் மட்டும் போதாது. அடியவர்களின் அடியவனாகவும் இருக்க வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, 'அடியவர்க்கு அடியன் ஆவேன்' தலைப்பில், பவானி சிவனடியார் திருக்கூட்ட தலைவர் தியாகராஜன் பேசினார். அதேபோல், திருக்கூட்டத்தின் மாநில தலைமை இணை ஆலோசகர் தங்கத்துரை சுவாமி, தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்ற தலைவர் ஒளியரசு பேசினர். இதில், மாவட்ட தலைமை ஆலோசகர் சரவணன், சண்முகா மருத்துவ குழும தலைவர் பன்னீர்செல்வம், பன்னிரு திருமுறை மன்ற அறக்கட்டளை தலைவர் சிங்காரவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.