போதை மாத்திரை விற்பனை மருந்து கடை உரிமம் ரத்து
சேலம்,சேலம், கே.ஆர்., தோப்பூர் அடுத்த டி.குணக்கம்பாடியில், 'ஹரிணி பார்ம்' மருந்து, மாத்திரை மொத்த விற்பனை செய்யும் கடை உள்ளது. அங்கு மருந்து ஆய்வாளர், போலீசார் அடங்கிய குழுவினர் நடத்திய சோதனையில், வலி நிவாரணி மாத்திரைகளை முறைகேடாக கொள்முதல் செய்து, அதை, 'போதை' வாலிபர்களுக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக வீராணம் தனிப்படை போலீசார் வழக்குப்பதிந்து, கடந்த பிப்., 15ல், ஹரிணி பார்ம் உரிமையாளர் கோகுலன், 29, என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில், ஹரிணி பார்முக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. மேல் நடவடிக்கை எடுக்க சென்னை மருந்து கட்டுப்பாடு இயக்குனருக்கு, சேலம் உதவி கமிஷனர் மாரிமுத்து பரிந்துரைத்தார். அதையேற்று, ஹரிணி பார்ம் உரிமத்தை நிரந்தர ரத்து செய்து, இயக்குனர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். அதே விவகாரத்தில் ஏற்கனவே, சித்தனுார் பிரதான சாலையில் கோகுல் மெடிக்கல் உரிமம் நிரந்தர ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மருந்து ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.