6 மாணவியருக்கு தொல்லை; ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, அரசு பள்ளி மாணவியர், 6 பேருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில ஆசிரியரை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்தவர் பிரபு, 32. இவர், திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிருஷ்ணாபுரத்தில் தங்கி, அருகே மலை கிராமமான, காவலுார் மலைரெட்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த, 21ம் தேதி பள்ளியில், கம்ப்யூட்டர் செய்முறை தேர்வு நடந்தது. அப்போது அவர், 7ம் வகுப்பு மாணவியர், 6 பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியர், '1098' எண்ணில் புகார் அளித்தனர். அதன்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மேத்யூ, சம்பவ இடம் சென்று, மாணவியரிடம் விசாரணை நடத்தி, வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசில், ஆசிரியர் பிரபு மீது புகார் செய்தார். இதையடுத்து அவரை, போக்சோவில் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.