பல லட்சம் ரூபாய் மோசடி நிதி நிறுவன அதிபர் கைது
மேட்டூர்:சேலம் மாவட்டம், மேட்டூர் அணை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 32; லாரி டிரான்ஸ்போர்ட் வைத்துள்ளார். மேட்டூர், விருதாசம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி, 63; குறிஞ்சி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். தன் நிறுவனத்தில் முதலீடு செய்தால், 15 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பலரிடம் முதலீடாக பணம் பெற்றுள்ளார்.நம்பிய ஸ்ரீகாந்த், குறிஞ்சி நிறுவனத்தில், 48.79 லட்சம் ரூபாயை கட்டினார். ராமசாமி வட்டியும் தராமல், பணத்தையும் திருப்பி தரவில்லை. ஸ்ரீகாந்த், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் பலரிடமும் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. ராமசாமியை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த நிதி நிறுவனத்தில், முதலீடு செய்து ஏமாந்தவர்கள், அசல் ஆவணங்கள், அடையாள அட்டையுடன் புகார் அளிக்கலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.