பாறை நடுவே சிக்கிய சுற்றுலா பயணி போராடி மீட்டனர் தீயணைப்பு வீரர்கள்
ஏற்காடு:இரு பாறைகள் நடுவே சுற்றுலா பயணியின் கால் சிக்கிக்கொண்டதால், தீயணைப்பு துறையினர், கடப்பாரையால் பாறைகளை உடைத்து, அவரை பத்திரமாக மீட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள், எட்டு பேர், நேற்று, சேலம் மாவட்டம், ஏற்காடு வந்தனர். காலை, 10:00 மணிக்கு, கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்தனர். அங்கு, விழுப்புரம், சித்தேரிப்பட்டியைச் சேர்ந்த லோகேஷ், 21, ஒரு பாறையில் இருந்து, மற்றொரு பாறைக்கு செல்ல முயன்ற போது, கால் இடறி, இரு பாறைகளுக்கு நடுவில் விழுந்தார். இதில், அவரது ஒரு கால், பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டது. அவரது அலறல் கேட்டு, நண்பர்கள், சுற்றுலா பயணியர், மீட்க முயன்றனர். முடியாததால், ஏற்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வீரர்கள், லோகேைஷ மீட்க முயன்றனர். முழங்கால் வரை பாறை இடுக்கில் சிக்கியதால், சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து கடப்பாரை, சுத்தியல் பயன்படுத்தி, பாறையை உடைத்த வீரர்கள், ஒரு மணி நேரத்துக்கு பின், லோகேைஷ பத்திரமாக மீட்டனர். அவரது காலில் சிறு காயங்கள் ஏற்பட்டன. தீயணைப்பு துறையினரை, சுற்றுலா பயணியர் பாராட்டினர்.