பட்டறை அதிபரை கடத்திய 5 பேர் சுற்றிவளைப்பு
சேலம் சேலம், கிச்சிப்பாளையம், கடம்பூர் சுப்ரமணிய நகர், 1வது குறுக்கு தெருவை சேர்ந்த பிரகாஷ் மகன் சூர்யா, 25. அதே பகுதியில், 'கவரிங்' நகைகளுக்கு தங்கமுலாம் பூசும் பட்டறை வைத்துள்ளார். இவர் கடந்த, 25 இரவு, 11:00 மணிக்கு வீட்டில் தனியே இருந்தார். அப்போது கதவை தட்டி உள்ளே புகுந்த கும்பல், கத்தியை காட்டி, ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர். அவர், பணம் தரமறுத்த ஆத்திரத்தில், அவரை கடத்தி சென்று, அப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் அடைத்து, கைகளை பின்புறம் கட்டிவைத்து சரமாரியாக தாக்கினர். அப்போது வெளியே சத்தம் வர, அக்கும்பல் தப்பி ஓடிவிட்டது. அங்கிருந்து மீண்டு வந்த சூர்யா, பணம் கேட்டு மிரட்டியவர்கள் குறித்து, கிச்சிப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஆசிக் அலி, 25, இர்பான் அலி, 21, முகமது அலி, 53, அப்துல் ஆசிஸ், 21, முகமது பிலால், 20, ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.