வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு: முகாமில் 23 பேர்
வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு: முகாமில் 23 பேர்ஆத்துார், டிச. 2-ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கன மழை பெய்து வருகிறது. கல்வராயன்மலையில் பெய்து வரும் மழையால், நீரோடை, சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆணைமடுவு, கரியகோவில் அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துள்ளதால், வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நரசிங்கபுரம் அணைமேடு தடுப்பணை நிறைந்து தண்ணீர் செல்கிறது. 3 ஆண்டுகளுக்கு பின், வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து ஆத்துார், தலைவாசல் பகுதி ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இன்று தடைஅதேபோல் கல்லாநத்தம் ஊராட்சி முட்டல் ஏரி, ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சி வழிப்பாதைகளில் உள்ள நீரோடைகளிலும் சிறுபாலம், சாலையை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. இதனால் நீர் வீழ்ச்சிக்கு செல்ல, சுற்றுலா பயணியருக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. இன்றும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முட்டல் ஏரியில் காற்றின் வேகம் அதிகளவில் உள்ளதால் படகு சவாரியும் நிறுத்தப்பட்டது. பூங்காவை மட்டும் சுற்றுலா பயணியர் பார்க்க அனுமதித்த நிலையில், மழையால் சுற்றுலா பயணியர் வரவில்லை. ராமநாயக்கன்பாளையம், 10 ஏக்கர் காலனி, கல்பகனுார், காட்டுக்கோட்டை, மணிவிழுந்தான் தேனுாற்றுவாரி உள்ளிட்ட நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து அதிகம் உள்ள இடங்களில் வருவாய், பொதுப்பணி, வனத்துறையினர், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆத்துார் நகரில் மரக்கிளைகள், மின் கம்பத்தில் முறிந்து விழுந்ததால், மின்தடை ஏற்பட்டது.நிவாரண பொருட்கள்வீரகனுார், வடக்கு வீதி, தண்டைக்காரன் கோவிலை சேர்ந்த அண்ணாதுரை வீடு முற்றிலும் இடிந்தது. அதேபோல், 4 வீடுகளின் சுற்றுச்சுவர் இடிந்தும், ஆபத்தான நிலையிலும் உள்ளன. இதனால், 5 குடும்பங்களை சேர்ந்த, 23 பேர், பரிதவித்தனர். இதை அறிந்து, தலைவாசல் தாசில்தார் பாலாஜி தலைமையில் வருவாய்த்துறையினர், 23 பேரை மீட்டு அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் முகாம் அமைத்து, அங்கு தங்க வைத்தனர். அவர்களுக்கு, மதியம், இரவு உணவு வழங்கி, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.40 குடும்பம் தத்தளிப்புதலைவாசல் அருகே வீரகனுார் டவுன் பஞ்சாயத்து, ராயர்பாளையம் கிராமம், ஆத்துார் - பெரம்பலுார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. அதில், 40 குடியிருப்புகள், சாலையோர பள்ளத்தில் உள்ளதால், தெரு முழுதும் மழைநீர் தேங்கி வீட்டில் இருந்து வெளியே வரமுடியாத நிலை இருந்தது. தவிர சில வீடுகளில் மழைநீரும் புகுந்துள்ளது. தாசில்தார் பாலாஜி தலைமையில் வருவாய்த்துறையினர், டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் மூலம், தண்ணீர் உறிஞ்சும் வாகனம், 'பொக்லைன்' வரவழைத்து, இரவு, 7:00 மணி முதல், நீரை வடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.பயிர்கள் சேதம்வீரகனுார், திட்டச்சேரி, லத்துவாடி, கெங்கவல்லி, தலைவாசல் பகுதிகளில், மக்காச்சோள பயிர்கள் முறிந்து விழுந்தன. அதேபோல் மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் மரவள்ளி கிழங்கு செடிகள் முறிந்தும், மழைநீர் தேங்கியும் நின்றன. அறுவடை நிலையில் உள்ள மஞ்சள் தோட்டங்களில் மழைநீர் தேங்கி நின்றதால், தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஆற்றில் கன்றுக்குட்டி மீட்புவசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கால், முல்லைவாடியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. நரசிங்கபுரம், அணைமேடு தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அந்த பாதையை போலீசார், தடுப்பு ஏற்படுத்தி மூடினர். தவிர, எம்.ஜி.ஆர்., நகர் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு, ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.மேலும் முல்லைவாடியில் ஆற்றின் கரையில் கட்டி வைத்திருந்த கன்றுக்குட்டி, மதியம், 2:30 மணிக்கு வெள்ளத்தில் அடித்துச் சென்றது. ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். மதியம், 2:40 மணிக்கு அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் கயிறு கட்டி இறங்கினர். ஒரு மணி நேரத்துக்கு பின், கன்றுக்குட்டியை பத்திரமாக மீட்டனர்.ஏரி நிரம்பியதுகெங்கவல்லி அருகே, தம்மம்பட்டியில் பெய்த மழையால் கொண்டையம்பள்ளி ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.