ஓய்வூதிய மறு சீரமைப்பு தேவை முன்னாள் வங்கி நிர்வாகிகள் தீர்மானம்
சேலம், :ஓய்வூதிய மறு சீரமைப்பு தேவை என, முன்னாள் வங்கி நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பாரத ஸ்டேட் வங்கியின், முன்னாள் தொழிற்சங்க தலைவர்கள் கூட்டமைப்பின், பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. தலைவர் ராமன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சந்திரசேகரன், துணை செயலர் முருகையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:நாட்டில் உள்ள, 8 லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கு, ஓய்வூதிய மறு சீரமைப்பையும், ஆண்டுதோறும் வழங்க வேண்டிய கருணை தொகை உயர்வையும், தாமதமின்றி வழங்க இந்திய வங்கிகள் நிர்வாகம் முன்வர வேண்டும். பொதுத்துறை வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் துறை உள்ளடங்கிய நிதித்துறையில், தனியார் மயத்தை தவிர்த்து, பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒருங்கிணைந்த தொழிலாளர் நலச்சட்டத்தை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி., மற்றும் பல்வேறு வரிகளை குறைப்பதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும், மக்கள் சேவையாற்றி வரும் பொதுத்துறை அமைப்பான எல்.ஐ.சி.,யை பலவீனப்படுத்தும் மசோதாக்களை மத்திய அரசு கைவிட வேண்டும். வங்கி ஓய்வூதியர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களுக்கும், ஹெல்த் இன்சூரன்ஸை அரசே வழங்குவதோடு, அதற்கு விதிக்கப்படும், 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.