மகளிருக்கு இலவச பயணத்தால் குறைந்தது வசூல்; பஸ் இயக்கத்தை நிறுத்தியதால் கிராம மக்கள் அவதி
பனமரத்துப்பட்டி: சேலம், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கொண்ட லாம்பட்டி, பூலாவரி, பாரப்பட்டி, பசுவநத்தம்பட்டி, மூக்குத்திப் பாளையம் வழியே மல்லுாருக்கு, டவுன் பஸ்(தடம் எண்: 35/72) இயக்கப்பட்டது. அதேபோல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கொண்டலாம்பட்டி, பூலாவரி, லட்சுமனுார், வாணியம்பாடி, ஏர்வாடி, வாழக்குட்டப்பட்டி வழியே, மல்லுாருக்கு ஒரு டவுன் பஸ் இயங்கி வருகிறது. இதில் மூக்குத்திப்பாளையம் வழியே சென்ற டவுன் பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது.மீண்டும் இயக்கணும்!இதுகுறித்து மூக்குத்திப்பாளையம் கிராம மக்கள் கூறியதாவது: தினமும், 4 முறை வந்து சென்ற பஸ், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் மல்லுார் செல்லும் பள்ளி மாணவ, மாணவியர், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். சாலை அகலம் குறைவாக உள்ளதாக, அதிகாரிகள் காரணம் கூறுகின்றனர். இரு இடங்களில் மட்டும் குறுகலாக உள்ளது. உண்மையில் மகளிர், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவசம் என்பதால், வசூல் குறைந்ததால், பஸ் இயக்கத்தை நிறுத்திவிட்டனர். மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.குறுகிய சாலைபஸ் டிரைவர், கண்டக்டர்கள் கூறியதாவது: மூக்குத்திப் பாளையம், மல்லுார் உள்ளிட்ட இடங்களில் பஸ்சை திருப்ப முடியாதபடி சாலை குறுகலாக உள்ளது. எதிரே வாகனம் வந்தால் ஒதுங்க வழி இல்லை. சாலையில் பந்தல் போட்டு மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். மல்லுாரில் பஸ் ஸ்டாண்டும் இல்லாததால், பஸ்சை திருப்ப இடமில்லை.பாரப்பட்டி, மூக்குத்திப் பாளையம், மல்லுார் தடத்தில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். மேலும் ஒரு நடைக்கு, 100 ரூபாய் கூட வசூலாவதில்லை. நிர்வாகத்துக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. அதிகாரிகள், மல்லுார், மூக்குத்திப்பாளையம், பாரப்பட்டி சாலையை ஆய்வு செய்து, குறுகிய சாலையில் பஸ் இயக்குவது சிரமம் என, அரசுக்கு அறிக்கை அளித்துவிட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.தட்டிக்கழிப்புமாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மல்லுார், பாரப்பட்டி, மூக்குத்திப்பாளையம் கிராம தார்ச்சாலை, 12 அடி அகலம் கொண்டது. அதில்தான் பள்ளி, கல்லுாரி பஸ்கள், வேன்கள் சென்று வருகின்றன. ஏற்கனவே, அந்த வழியில் இயக்கிய பஸ்சை நிறுத்திவிட்டு, சாலை அகலம் குறைவு என, காரணம் கூறி தட்டிக்கழிக்கின்றனர். இருப்பினும் அச்சாலையை புதுப்பிக்கும்போது, அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.