மேலும் செய்திகள்
300 விநாயகர் சிலைகள் கரைப்பு
29-Aug-2025
சேலம், சதுர்த்தியை ஒட்டி, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, 2,000க்கும் மேற்பட்ட சிலைகள், நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த, 27ல் கொண்டாடப்பட்டது. அதன், 3ம் நாளான நேற்று சேலத்தில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி இந்து முன்னணி சார்பில் நடந்தது. சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில், மாநில பொதுச்செயலர் கிேஷார்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாநகரில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட, 75 சிலைகளும், குமார சாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் கோவில் முன் கொண்டுவரப்பட்டன.தொடர்ந்து, 2 முதல், 10 அடி விநாயகர் சிலைகள், வீட்டில் வைத்து வழிபட்ட சிறு விநாயாகர் சிலைகள் என, 1,000க்கும் மேற்பட்ட சிலைகள், அங்கு கொண்டுவரப்பட்டன. சிறப்பு பூஜை செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேள தாளம் முழங்க பக்தர்களின் உற்சாக ஆட்டத்துடன் தொடங்கிய ஊர்வலம், அஸ்தம்பட்டி, சின்னதிருப்பதி வழியே மூக்கனேரியை அடைந்தது.அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, வடக்கு துணை கமிஷனர் சிவராமன் தலைமையில், 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்தில், ஏராளமான பெண்களும், கைகளில் விளக்குகள் ஏந்தியபடி சென்றனர். ஊர்வல பகுதிகளில் போக்கு வரத்து தடை செய்யப்பட்டு, வேறு வழியில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. கன்னங்குறிச்சி, மூக்கனேரியை அடைந்ததும், ஒன்றன் பின் ஒன்றாக சிலைகள் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன. பா.ஜ., மாவட்ட தலைவர் சசிகுமார், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநில தலைவர் கோபிநாத், பொதுச்செயலர் பிரபாகரன் உள்ளிட்ட, பா.ஜ., நிர்வாகிகள், இந்து முன்னணியினர் பங்கேற்றனர்.அரசுக்கு எதிராக கோஷம்மாலை, 6:00 மணிக்கு ஊர்வலம் தொடங்கிய நிலையில், அஸ்தம்பட்டி, சின்னதிருப்பதி பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே, மின் தடைக்கு காரணமான மாநகராட்சிக்கு எதிராகவும், மின்வாரியத்துறைக்கு எதிராகவும் பா.ஜ.,வினர், மொபைல் போன் மூலம், 'டார்ச் லைட்'டை எரியவிட்டு, தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி சென்றனர்.அதேபோல் வாழப்பாடி, பேளூர் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது. குறிச்சி பிரிவு சாலை வரை, சிலைகளை வாகனத்தில் ஊர்வலமாக சென்ற பின், புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் கரைத்தனர். தொடர்ந்து வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கி, அக்ரஹார வீதியில் சென்று, வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷன் பஸ் ஸ்டாப் முன் நிறைவடைந்தது. பின் சிலைகள் ஆணைமடுவு அணைக்கு கரைக்க கொண்டு செல்லப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் உள்ளிட்ட, பா.ஜ.,வினர் பங்கேற்றனர். காவிரியில் கரைப்புநேற்று கல்வடங்கம் காவிரி ஆற்றில், 428 சிலைகள், பூலாம்பட்டி காவிரி ஆறு, பில்லுக்குறிச்சி வாய்க்கால், ஓணாம்பாறை வாய்க்கால் ஆகிய இடங்களில், 99 சிலைகள் கரைக்கப்பட்டன. மேலும் ஆத்துார் டவுனில், 45 சிலைகள், ஊரக பகுதியில், 13 சிலைகள், மற்ற இடங்களில் இருந்து, 10 சிலைகள் என, 68 சிலைகளை, மினி சரக்கு வேன்களில் எடுத்துச் சென்று முட்டல் ஏரியில் கரைத்தனர். ராட்சத விநாயகரால் நெரிசல்ஏற்காடு, அதன் சுற்றுப்பகுதிகளில் வைத்த விநாயகர் சிலைகளை, படகு இல்ல ஏரி வரை ஊர்வலமாக எடுத்து வந்து, போலீஸ், தீயணைப்பு துறையினர், படகு இல்ல ஊழியர்கள் உதவியுடன் கரைத்தனர். இதில் ஜெரீனாக்காடு முனியப்பன் கோவிலில், 1,500 கிலோ, 17 அடி உயரத்தில் வைத்திருந்த ராட்சத விநாயகர் சிலை, கிரேன் உதவியுடன் கரைத்தனர்.முன்னதாக கிரேனை, சாலை நடுவே நிறுத்தி, சிலையை கரைக்கும் பணி நடந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சேலம் மாவட்டம் முழுதும், 2,000க்கும் மேற்பட்ட சிலைகள், நீர்நிலைகளில் கரைக்கப்பட்டதாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
29-Aug-2025