25 ஆண்டுகளுக்கு பின் வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் கிரிவலம்
ஆத்துார், கடந்த, 25 ஆண்டுகளுக்கு பின், வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது.ஆத்துார் அருகே, வடசென்னிமலையில் பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின், நேற்று பவுர்ணமி கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது. இரவு, 7:30 மணியளவில் துவக்கப்பட்ட கிரிவலத்தில் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் அடிவாரத்தின் கிழக்கு பகுதியில் இருந்து, தென்பகுதியாக சென்று, மேற்கு வழியாக பக்தர்கள் வந்தனர். அப்போது, கோவில் நிர்வாகம் சார்பில் டிராக்டர் உதவியுடன் மின் விளக்கு அமைத்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். அதே பகுதியை சேர்ந்த, வரதராஜ், 30, என்பவர் 'தனது பட்டா இடம் வழியாக வழிப்பாதை உள்ளது. இவ்வழியாக யாரும் செல்லக் கூடாது' என, கிரிவலம் சென்ற பக்தர்களை தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து, மின்விளக்கு பணிகளையும் தடுத்தார்.இதனால், கிரிவலம் வந்த பக்தர்கள், கோவில் நிர்வாக குழுவினர், வரதராஜூடன் வாக்குவாதம் செய்தனர். தகவலறிந்த ஆத்துார் ஊரக போலீசார், இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார், 'பக்தர்கள் செல்வதை தடுக்க வேண்டாம். நிலத்தின் உரிமை இருந்தால், வருவாய்த்துறையினரை அணுகி தீர்வு காணவேண்டும்' என்றனர். பின்னர், பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு அனுமதித்தனர். மலை அடிவாரத்தில் 4 கி.மீ., துாரம் கிரிவலமாக சென்ற பக்தர்கள், பாலசுப்ரமணியரை வழிபாடு செய்து சென்றனர்.