அரசு மருத்துவமனையில் நவீன சாதனம் மூலம் 6 பேருக்கு இதய குறைபாடு சரி செய்து சாதனை
சேலம், ஆறு பேருக்கு, தலையீட்டு சாதனம் மூடல் மூலம், இதய குறைபாடு சரி செய்து, சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.சேலம் அரசு மருத்துவமனையில் இசைமதி, 5, சபரிநாதன், 16, ஆகிய இருவருக்கு 'வென்ட்ரிகுலர் செப்டல்' குறைபாடு, கவுதம், 15, சத்யா, 15, ஆகியோருக்கு பேடன்ட் டக்டஸ் ஆர்டெரியோசஸ் குறைபாடு, வள்ளி, 27, சுகுணா, 32, ஆகியோருக்கு ஏட்ரியல் செப்டேல் குறைபாடு என ஆறு பேர் இதய குறைபாடு நோய்களால் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இவர்களுக்கு கடந்த, 12ம் தேதி மருத்துவமனையின் இதயவியல் துறை டாக்டர்கள் 'எக்கோகார்டியோகிராபி' கருவி மூலம், இதய குறைபாட்டின் அளவை கண்டுபிடித்து அதன் தன்மைக்கேற்ப, 'தலையீட்டு சாதனம் மூடல்' மூலம் சிகிச்சை அளித்து குறைபாடு முழுமையாக சரி செய்யப்பட்டது.இதனால் அவர்களுக்கு, பிற்காலத்தில் இதய செயலிழப்பு, மாறுபட்ட இதய துடிப்பு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கப்பட்டுள்ளது. உயர்தரமான சிறப்பு சிகிச்சையில் பொது மருத்துவம், மயக்கவியல், இதய அறுவை சிகிச்சை, இதய மருத்துவர் குழு உள்ளிட்ட அனைத்து டாக்டர்கள் அடங்கிய குழுவினர், வெற்றிகரமாக சிகிச்சை அளித்து சாதனை புரிந்துள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று நவீன உயர்தர சிகிச்சையில் பயனடைந்த ஆறு பேர் மற்றும் சிகிச்சையளித்த டாக்டர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ''இந்த மாதிரியான உயர்தர சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில், 2 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு மருத்துவமனையில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில், கடந்தாண்டு ஆகஸ்டில் நான்கு குழந்தைகளுக்கு இதே போன்ற இதய குறைபாடு சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது ஆறு பேர் பயனடைந்துள்ளனர்,'' என்றார்.மருத்துவமனை டீன் தேவி மீனாள் உடனிருந்தார்.